Femma case order

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் ராமு அண்ணாமலை. இந்த நிறுவனத்தில் இவரது சகோதரர் பழனியப்பனும் பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் வெளிநாடுகளுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு ரூ. பல கோடி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி கடந்த செப்.2 மற்றும் செப்.3 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இவர்களது வீட்டில் சோதனை மேற்கொண்டு, வாக்குமூலம் பெற்று ஆவணங்களை பதிவு செய்தனர். இந்த சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இயற்கை உபாதைகளை கழிக்கக்கூடாது தங்களை அனுமதிக்கவில்லை என்றும், குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகள் 2 நாட்களாக தடைபட்டது என்றும், சிசிடிவி கேமரா பதிவுகளை அகற்றியுள்ளனர் எனவும் குற்றம் சாட்டி மனுதாரர்களான ராமு அண்ணாமலை, பழனியப்பன் மற்றும் ராமு அண்ணாமலையின் மனைவி ஆர்.உமையாள் ராதை ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அதிகாரிகள் நடத்திய சோதனை மற்றும் விசாரணைக்கு ஆஜராக பிறப்பித்த சம்மன் மற்றும் சோதனையின்போது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும், என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக நடந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷூம், மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் நிதியேஷ், முரளிகுமரன், நர்மதா சம்பத் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ வெளிநாடுகளுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்தால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்நிய பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் பிரகாரம் சட்டப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை எதிர்த்து மனுதாரர்கள் வழக்கு தொடர முடியாது. எனவே சோதனையின்போது பெறப்பட்ட வாக்குமூலங்களின் பதிவுகளை மனுதாரர்களுக்கு அதிகாரிகள் 2 வாரங்களில் வழங்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை என்பதால் வழக்கறிஞர்களை உடனிருக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

You may also like...