Elephant case
வனப்பகுதிகளில் உயிரிழக்கும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது, முழுமையாக வீடியோ பதிவு செய்வது தொடர்பாக, அனைத்து வனத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளையங்கிரி ஆண்டவர் கோவிலில், கடந்த ஆண்டு அக்டோபரில் நுழைந்த யானை, இரண்டு நாட்களில் இறந்துள்ளது.
இந்த யானையின் உடலுறுப்புகளை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பாமல், பிரேத பரிசோதனை செய்து, புதைத்து விட்டதாக, விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன், வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் முறையிட்டிருந்தார்.
இதையடுத்து, வனப்பகுதிகளில் உயிரிழக்கும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது, வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், இதுசம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப, முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு, சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது, கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என, அனைத்து வனத்துறை அதிகாரிகளுக்கும், கடந்த டிசம்பர் 16ம் தேதி முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக, வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த சுற்றறிக்கையில், அசல் வீடியோ பதிவுகளை மண்டல அளவில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும், சந்தேகத்துக்குரிய வகையில் இறந்த யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் டி.என்.ஏ., மாதிரிகளை கட்டாயம் சேகரித்து, பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
….