Ed case against dgp chief justice bench directed to file counter related to sand mining and k n neru case

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அதிகாரிகள் நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், அமலாக்கத் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024-25 ம் ஆண்டுகளில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை என மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதால், இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யக் கோரி, அமலாக்கத் துறை, தமிழக டிஜிபி-க்கு கடந்த அக்டோபர் மாதம் கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், இதுசம்பந்தமாக தலைமைச் செயலாளரிடம் உரிய அனுமதிகளைப் பெற்று, வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், உரிய ஆதாரங்களுடன் 232 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. விசாரணைக்கு உரிய குற்றம் நடந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தால் அதன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை. அமலாக்கத்துறைக்கு ஊழல் வழக்குகளை பதிவு செய்ய நேரடியான அதிகார வரம்பு இல்லை என்பதால், வழக்கு பதிவு செய்யும்படி டிஜிபி க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்மீது வழக்கு பதிவு செய்யாததால், அமலாக்கதுறை விசாரணை நடத்தமுடியவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்படி டிஜிபிக்கு நவம்பர் மாதம் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, ஜனவரி 23 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, டிஜிபி மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவையும், ஜனவரி 23 ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்துள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version