Dmk mp and senior advocate NR elango speech in parliment [2/4, 13:41] Sekarreporter1: 1. மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த அவையில் முதலுரையாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

[2/4, 13:40] Sekarreporter1: Dmk mp and senior advocate NR elango speech in parliment
[2/4, 13:41] Sekarreporter1: 1. மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த அவையில் முதலுரையாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வவையில் எனது பணிகளைத் தொடங்க தங்களது வாழ்த்துகளை கோருகிறேன். இந்த அவையின் உறுப்பினராக என்னை முன்மொழிந்து என்னை இந்த அவையின் உறுப்பினராக ஆக்கிய எனது தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த முன்மொழிவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட எனது கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. திராவிடப் பண்பாட்டைச் சேர்ந்த, திராவிடக் கொள்கைகளை வடிவமைத்த, ஆளுமை செலுத்திய தலைவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்: டாக்டர் .C. நடேசனார், பனகல் அரசர் ராம ராய் நிங்கவரு, சர்.பிட்டி தியாகராயர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், டாக்டர் டி.எம். நாயர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர், இனமான பேராசிரியர் அன்பழகனார். இந்த மாபெரும் தலைவர்களால்தான் என்னைப் போன்ற சாதாரண மக்களும் கல்வியறிவு பெற்று அரசியலில் பங்கு பெற்று இந்த மேலவையில் உறுப்பினராக செயலாற்ற முடிந்திருக்கிறது.

3. ஐயா, எனது தலைவர் ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின், தமிழர்களின் இன்னல்களை இந்த அவைக்கு விளக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார், தமிழகத்தின் இலட்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகத்தான், இந்த அவையில் மேனாளில் அறிஞர் அண்ணா பேசியதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

4. 25.01.1963 அன்று இந்த அறிவார்ந்த அவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது: “இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குவிந்துகிடப்பதற்காக இல்லை. நமக்கு ஒரு கூட்டமைப்பு அமைப்பு உள்ளது. அதனால்தான் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கூட்டாட்சி அமைப்பையே விரும்பினர், ஒற்றையாட்சி அமைப்பு அல்ல, ஏனென்றால் பல அரசியல் தத்துவவாதிகள் சுட்டிக்காட்டியுள்ளபடி இந்தியா ஒரு பரந்துவிரிந்த துணைக்கண்டம். உண்மையில் அது மிகவும் பரந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது, அதன் மனப்பாங்குகள் வெவ்வேறு வகைகொண்டது. மரபுகள் மிகவும் வேறுபட்டவை, தத்தம் வரலாறுகள் மிகவும் வேறுபட்டது, இங்கு ஒரே எஃகுக் கட்டமைப்பு கொண்ட ஒற்றையாட்சி இருக்க முடியாது.”

5. 1962 ஏப்ரல் மாதம் இந்த அவையில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையினை நான் படித்தபோது, அன்று அவர் முன்வைத்த கோரிக்கைகள், அதற்கான காரணங்கள் இன்றும் மாறவில்லை. தேர்தல் முறைகேடுகள், ஜனநாயகம், சோசலிசம், மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு பற்றியெல்லாம் விரிவாக அண்ணா பேசியுள்ளார். இந்த பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்தபடியே உள்ளன.

6. நமது நாட்டில் தற்போது 562 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்று தெரிவித்த மதிப்புக்குரிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவக் கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் 50,000 க்கும் மேற்பட்ட இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த உயர்வு காரணமாக மாநில அரசுகள் இளநிலைப் படிப்பில் 15% இடங்களையும் முதுநிலை இடஒதுக்கீட்டில் 50% இடங்களையும் அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அகில இந்திய இடஒதுக்கீடு இடங்களையும் அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

7. கடுமையான, மக்கள் விரோத, கூட்டாட்சிக்கு எதிரான மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில், போராடும் விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் வலிமையைப் பார்த்த பிறகு, இந்தப் போராட்டத்தில் சுமார் 160 விவசாயிகள் உயிர் இழந்தனர் என்ற அதிர்ச்சித் தகவல் கேள்விப்பட்ட பிறகு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரையில் மூன்று வேளான் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக நிச்சயம் அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் இங்கு வந்தேன். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, அது நடக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார். ஐயா, இந்தச் சபையில் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் பற்றிய சர்ச்சைக்குரிய விஷயத்தைப் பற்றி நான் பேசுவதை இப்போது தவிர்க்கிறேன்.

8. குடியரசுத் தலைவர் உரையில், “விவசாய உள்கட்டமைப்பு நிதிக்காக” ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் “KISAN RAIL” பற்றியும் பேசப்படுகிறது. எம் எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த அரசு முடிவு செய்திருப்பதையும், உற்பத்திச் செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கவும் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த அரசு முடிவு செய்திருப்பதாக குடியரசுத் தலைவர் உரை தெரிவிக்கிறது. உற்பத்திச் செலவை நிர்ணயிப்பதற்கான அடிப்படை என்ன என்பதே பிரச்சினை.அதுமட்டுமல்லாமல் புதிதாக இயற்றப்பட்ட வேளான் சட்டங்கள், MSP (குறைந்தபட்ச ஆதரவு விலை) பற்றி எதுவும் சொல்லவில்லை.

9. ஐயா, ஜனாதிபதி உரை விவசாய உட்கட்டமைப்பு நிதி பற்றி பேசுகிறது, ஆனால் அதற்கு மாறாக பட்ஜெட் உரையில் 9 வது பக்கம் 47வது பத்தியில் ஏற்கனவே உள்ள விவசாய உள்கட்டமைப்புகளான CPSE இன் சேமிப்பு கிடங்கு சொத்துகளான மத்திய கிடங்கு கார்ப்பரேஷன் போன்றவை மற்றும் NAFED விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

10. ஜனாதிபதி உரை 100 கிசான் ரெயில்கள் பற்றி பேசுகிறது ஆனால் பட்ஜெட் உரையில் ரயில்வே சேவைகள் மற்றும் பராமரிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தட சொத்துக்களை விற்று பணமாக்குவதாக அறிவிக்கப்பட்டது.

11. இந்த அரசு, பல ஆயிரம் கோடி ரூபாயை வரி செலுத்துவோரின் பணத்தை செலவு செய்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ரயில் சேவைகளையும் உருவாக்கி அதை விற்று பணமாக்குவது தனியார் நலனுக்காகத்தானா? ஒரு பக்கம் நீங்கள் பல லட்சம் கோடிகளை செலவு செய்து கட்டமைப்புகளை உருவாக்கிக்கொண்டு மற்றொரு பக்கம் விற்கிறீர்கள். இந்த அரசு புறம்பான நோக்கத்துக்காக சட்டமியற்றுவதற்கு தன் அதிகாரங்களைப் பயன்படுத்துகிறது என்று நான் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் லிமிட்டட் (1986)1SCC 133 வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளது.

மேற்கோள்
119. “எந்த நோக்கத்துக்காக ஒரு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அதற்கு புறம்பான நோக்கத்துக்கு அவ்வதிகாரம் பயன்படுத்தப்பட்டால் அது அதிகார துஷ்பிரயோகமாகும்”

மாநில APMC சட்டங்கள் ஏற்கனவே வேளான் துறையில் சீரிய முறையில் பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்தும் போது, மூன்று வேளான் சட்டங்கள் மாநில சட்டமியற்றும் அதிகாரங்களை பறிப்பதாகும். மாநில அரசுக்கு மட்டுமே உரித்தான ஒரு விஷயத்தில், ஒன்றிய அரசு, அதன் சட்டமியற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவசரஅவசரமாக சட்டமியற்றும் அவசியம் இல்லை. மேலும், விவசாயிகளுக்கு சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவர்களின் நலன்கள் பரிசீலிக்கப்படவில்லை. பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக அரசாங்கத்தின் சொற்பமான அக்கறையை பிரதிபலிக்கும் வகையில், முறையான பரந்த அடிப்படையிலான ஆலோசனை இல்லாமல், அத்தகைய சட்டம் ஏன் ஒரு பெரும்தொற்றுநோய் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை.

12. மாநிலப் பட்டியலில் 14,28,30,45,46,47,48 ஆகிய பதிவுகள் விவசாயம் தொடர்பானவை. எனவே, ஒன்றியப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் மத்திய நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே விவசாயம் தொடர்பாக மாநில சட்டமன்றங்களுக்குத் தனி அதிகாரம் அளிக்கிறது என்பது தெளிவாகிறது. மாநிலப் பட்டியலில், வேளாண்மை தொடர்பான எந்தப் பதிவும் ஒன்றிய அல்லது பொதுப் பட்டியல்களில் உள்ள எந்தப் பதிவுக்கும் உட்படாது. எனவே, பாராளுமன்றம் தனது சட்டமியற்றும் எந்த அதிகாரத்தைக் கொண்டு இந்த சட்டங்களை கொண்டுவந்தது என்பது புரியவில்லை.

13. அறிஞர் அண்ணாவின் “மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” சொற்பொழிவு நிகழ்ந்து 30 ஆண்டுகள் கழிந்த பிறகே மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது (எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்திய ஒன்றிய அரசு AIR 1994 SC 1918) வழக்கின் தீர்ப்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி அமைப்பு தான் கூட்டாட்சி அமைப்பு என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

14. 1970 செப்டம்பர் 13 அன்று, அப்போதைய தமிழக முதல்வர் முத்தமிழ்அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அரசியல் ரீதியாக, நிர்வாக ரீதியாக, நிதி ரீதியாக, மாநிலங்களுக்கான அதிக அதிகாரங்களை அவர் கோரினார், மேலும் மாநிலங்கள், தங்கள் பல பிரச்சினைகளைத் தீர்க்க இது ஒன்றே வழி என்றார். இன்று அரை நூற்றாண்டு ஆனபிறகும் கூட, கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பின் கீழ் நிதி தன்னாட்சிக்கான கோரிக்கை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது.

15. எனவே, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் நிதி தன்னாட்சி க்கான போராட்டத்தை திமுக எப்போதும் முன்னெடுத்து வருகிறது என்பதும், கூட்டாட்சி முறை மற்றும் அதிகாரப் பரவல் ஆகிய போராட்டங்களில் முன்னணியில் உள்ளது என்பதும் உண்மை. எனவே, இந்த நெடிய வரலாற்றுடன் முற்றிலும் இணைந்த எமது தலைவர் திரு.ஸ்டாலின்- 15 வது நிதிக் குழுவின் பல்வேறு குறைபாடுகளையும், அதன் குறிப்புவிதிமுறைகளையும் முதலில் கவனத்திற்குக் கொண்டு வந்தார். 22 மார்ச் 2018 அன்று, அவர் பிரதமருக்கும் 10 முதலமைச்சர்களுக்கும் எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை பாதிக்கும் ஆணையத்தின் நியாயமற்ற அம்சங்களை சுட்டிக்காட்டினார்.

16. வேளான் சட்டங்களைப் பொருத்தவரை அவை மாநிலங்களின் உரிமையை பறிக்கின்றன. “விவசாயி” என்ற சொல் அதன் உண்மையான பொருளை இழந்து விடுகிறது. இந்த வேளான் சட்டங்கள், தவறான கூட்டமைப்புகளை உருவாக்கும். விவசாயிகள் அறியாவன்ணம் அவர்களுக்கு பல இன்னல்களையும் அளித்து கொள்முதல் கூட்டமைப்பாளர்களுக்கு அதிக அனுகூலத்தை தரும். இதில் எழும் சட்டப்பூர்வ சிக்கல்களை சட்ட அறிவு பெறாத அரசு அலுவலர்கள் எப்படி நியாயமாகத் தீர்க்கமுடியும்? எழும் சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்க்கான நடைமுறை என்ன என்பது சட்டத்தில் கொடுக்கப்படவில்லை. இந்திய சான்று சட்டத்தின் விதிகள் பொறுந்துமா என்பதும் தெரியவில்லை. இந்தச் சட்டங்கள் அனைத்தும் தெளிவற்றவை. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் திருத்தம் முதன்மையான சட்டத்துக்கு முரணானது. சமுதாயத்தின் பொருள்வளங்களாக இருக்கும் உணவை பொதுநலனுக்கு பாதகமாக சேமித்து வைப்பதற்காக வணிகர்களின் எதேச்சதிகாரத்திற்கு விட்டுவிட முடியாது. இந்த வேளான் சட்டங்கள் கள்ளச்சந்தையை சட்டபூர்வமாக்கி இருப்போர் இல்லோருக்கான ஏற்றத்தாழ்வை அதிகமாக்கும்.

17. ஹங்கர் வாட்ச் மற்றும் அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் அக்டோபர் 2020 மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில் நடத்திய கள ஆய்வுகள், நேர்காணல் செய்யப்பட்ட பொதுமக்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் உணவு உட்கொள்ளல் அளவு இன்னும் பெருந்தொற்று லாக்டவுனுக்கு முந்தைய உட்கொள்ளும் அளவிற்கு மீண்டும் வரவில்லை என்பதைக் கண்டறிந்தது. ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவு, சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றை உடனடியாக பாதிக்கும் காரணிகளாகும்.

18. ஐயா, ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் தேவை: நாம் எந்த வகையான நாடு? நாம் எப்படிப்பட்ட நாடாக இருக்கப் போகிறோம்? நம் நாட்டின் நாளைய தலைவர்களை மனதில் கொண்டு நம் இன்றைய செயற்பாடுகள் பற்றி சிந்திக்கத் தயாராக வேண்டும். இன்று நாம் நமது உள்வலிமையையும், நாம் வளர்ந்த இந்தியாவைப் பற்றிய கருத்தையும், அங்கு ஒற்றுமை, அன்பு, மற்றும் உறுதியைக் காணவேண்டும், அழிவுச் சக்திகளுக்கு அடிபணியாத, ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.அவ்வாறு செய்யும்போது மதச்சார்பின்மையின் கொள்கைகளை நாம் நினைவுபடுத்திக் கொள்வது முக்கியம். நாம் அனைவரும் வெறுப்பு மற்றும் பிரிவினை சக்திகள் போன்றவற்றை ஒன்று சேர்ந்து எதிர்த்து போராடவேண்டும், நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் மனதில் இந்தியா பற்றிய ஒரு கருத்து உள்ளது; அது வெவ்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், மொழிகள், குறித்த’சகிப்புத்தன்மை’ மட்டும் அல்ல. அனைத்தையும் தத்தம் தனித்தன்மையுடன் சரிசமமாகப் பார்க்கும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு நல்ல நாட்டை என் குழந்தைகள் எதிர்காலத்தில் வழிவழியாக பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

19. மாண்புமிகு அமைச்சர்களும் மாண்புமிகு பிரதம மந்திரியும் தமிழ் கவிஞர்களை அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறார்கள் என்பது வியப்பு அளிப்பதாக இருந்தாலும் நமது மாநிலத்தில் வேகமாக நடந்து வரும் தேர்தல் இதற்கு காரணமாக இருந்தாலும், நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். இந்தியில், ‘அன்ன தாதா’ என்று விவசாயிகளை மதிக்கிறீர்கள். மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாண்புமிகு பிரதமர் அவர்கள் படித்து அறிந்து கொள்ள வேண்டிய திருக்குறள் ஒன்றும் உள்ளது

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
விளக்கம்:

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

20. ஜனநாயகத்தில், எண்ணிக்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பெரும்பான்மை எது செய்தாலும் சரி என்று நம்பவைக்கப்படுகிறது. திருக்குறளின் இரு குறட்பாக்களை தங்கள் அனுமதியுடன் மேற்கோள் காட்டி சொல்ல வேண்டுகிறேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

21. இந்த மனப்போக்கை த் தொடர்ந்தால் என்ன நடக்கும்?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

விளக்கம்
தன்னை இடித்துக்கூறித் திருத்தவல்ல பெரியவர்களின் துணை இல்லாத, பாதுகாவலற்ற மன்னன், பகையாய்த் தன்னைக் கெடுப்பார் யாரும் இல்லாவிட்டாலும் தானே கெட்டழிவான்.

22. எனவே, இந்த அரசிடம் வைக்கும் வேண்டுகோள்கள்

A. வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்

B. மருத்துவக் கல்வியில் ஒன்றியத்தின் இடஒதுக்கீட்டின் மூலம் எடுத்துக்கொண்ட அனைத்து இடங்களையும் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பியளிக்க வேண்டும்.

C. “கூட்டாட்சி” யை நிலைநிறுத்த வேண்டும்

You may also like...