Chief justice bench ரிசார்ட்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி,
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்கள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சரணாலயப் பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் பிப்ரவரி , மார்ச் மாதங்களில் நடைபெறும். இந்த விழாவுக்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள். அவர்கள் வரும் வாகனங்களால் ஒலி மாசு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இது வனவிலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் திருவிழாவுக்கு 100 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். விழா நாட்களில் கோவில் வளாகத்தில் மட்டும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்க அனுமதிக்க வேண்டும். கோவில் வளாகத்திற்குள் ஆடுகள் பலியிடப்பட்டவுடன் அந்த இடம் சுத்தப்படுத்தப்பட வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். விழா முடிந்தவுடன் அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குள் பக்தர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் திருவிழாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், திருவிழா நேரத்தில் இயக்கப்படும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு தராத வகையில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தரவேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.