Actor sivaji sons senior adv p r raman arguments

நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என பாகப்பிரிவினை கோரிய வழக்கில்
நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், சொத்துக்களில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகவும், தங்களுக்கு உரிய பங்கை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமா சங்கர், சொத்துக்களை பிரித்து கொடுப்பதில் ராம்குமார், மற்றும் பிரபு ஆகியோர் நேர்மையாக செயல்படவில்லை என்றும், இறுதியாகவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என தெரிவித்தனர். மேலும் சாந்தி திரையரங்கு பங்குகளை விற்பதற்கு முன்னர், இயக்குனர் குழுவில் விற்பனைக்கான ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து ராம்குமார், பிரபு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் வாதிட்டபோது, மனுதாரர்கள் தொடர்ந்து உயிலின் நம்பகத்தன்மை குறித்தும், அது பொய்யானது என்றும் கூறிவருகின்றனர் என்றும், உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும், உயிலின் அடிப்படையில் தான் சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டது என வாதிடப்பட்டது.

தொடர்ந்து வாதங்கள் முடிவடையாததால், ராம்குமார் மற்றும் பிரபு தரப்பு வாந்தங்களுக்காக வழக்கு வியாழக்கிழமைக்கு (ஜூலை 21) தள்ளிவைத்தனர்.

You may also like...

Call Now ButtonCALL ME