நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள
திரவுபதி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தடை
ஐகோர்ட்டு உத்தரவு

நாகப்பட்டினம் மாவட்டம், பஞ்சநதிக் குளம் நடுச்சேத்தி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பரம்பரை அறங்காவலர் கா. பாண்டியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘திரவுபதி அம்மன் கோவிலின் பரம்பரை அறங்காவலராக எனக்கு முன்பு என் தந்தை காசிநாத தேவர் இருந்தார். இவர் ஒருவர் மட்டுமே 60 ஆண்டுகளாக கோவிலை நிர்வகித்து வந்தார். மற்ற பரம்பரை அறங்காவலர்கள் ஊரை விட்டு வெளியில் சென்று விட்டனர். பரம்பரை அறங்காவலர்களில் சிலர் கோவில் நிர்வாகத்தின் மீது அக்கறை செலுத்தாமல் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து விட்டனர். இந்தநிலையில் கடந்த மார்ச் 3-ந்தேதி இந்த கோவிலுக்கு புதிய பரம்பரை அறங்காவலர்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மூலம் நியமிக்கப்பட்டனர். இதில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பக்கிரிசாமி என்பவர் கடந்த 2005-ம் ஆண்டில் பரம்பரை அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். மற்ற இரு பரம்பரை அறங்காவலர்கள் கருணாநிதியும், கணேசன் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள். அறநிலையத்துறை சட்டத்தின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை நியமிக்கமுடியாது. அதுவும் இவரது தந்தை கலிதீர்த்தான், 1990-ம் ஆண்டு இறந்து விட்டார். சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களை அறங்காவலர்களாக நியமிப்பது சட்டப்படி செல்லாததாகும். எனவே, இந்த நியமனத்தையும், அறங்காவலர் குழு தலைவர் தேர்தலையும் நிறுத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் காசிநாதபாரதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
……….

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com