மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னாவிற்கும் காவல்துறை அதிகாரிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.*
*தஞ்சை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய ஆசிஷ் ராவத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி.*
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிஸ் ராவத் மீது, காவலர் குடியிருப்பில் இருந்த தேக்கு மரங்களை தனிப்பயன்பாட்டிற்காக வெட்டியதுடன், காவலர் நலச்சங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும், கட்டிடப் பணிகளில் டெண்டர் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைத்து, தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, ஊழல் கண்காணிப்பு துறை சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது லஞச ஒழிப்பு போலீசார் சார்பில் அப்போதைய மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி “தேவையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அரசின் முன் அனுமதியின்றி அரசு ஊழியர் மீது விசாரணை நடத்த முடியாது என வாதிட்டார்.
அப்போது கார்த்திகேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வழக்கு பதிவு செய்ய கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என்றும், கையாடல் செய்வது அவரது அரசு அலுவல் பணியல்ல எனவும், எனவே அதற்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை என்றும் வாதிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட எஸ்.பி. மேல்முறையீடு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய ஊழல் கண்காணிப்புத்துறை மேல்முறையீடு தாக்கல் செய்திருப்பது சட்டப்படி ஏற்க முடியாதது எனவும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அசன் முகம்மது ஜின்னா, வழக்கு தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே உயரதிகாரிகளிடமோ, சம்பந்தப்பட்ட எஸ்.பி.யிடமோ அல்லது ஊழல் கண்காணிப்புத்துறையினரிடமோ எந்தவித விளக்கமும் கேட்காமல், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது சட்ட நடைமுறைகளுக்கும்,உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது, அலுவல் பணியில் எழக்கூடிய எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அதனை விசாரிக்க அரசின் முன் அனுமதி தேவை.
மேலும், பாதிக்கப்பட்ட எஸ்.பி. மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பது தவறானது என்றும், வழக்கறிஞரை கைது செய்ததற்காகவே காழ்ப்புணர்ச்சியுடன் எஸ்.பி.மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், *நேர்மையாக செயல்படும் அதிகாரிகளின் நியாயமான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்பது அரசின் அடிப்படை கடமையாகும்; காவல் துறை அதிகாரிகள் மட்டுமல்ல, அனைத்து அரசு அதிகாரிகளும் நேர்மையுடன் மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ செயல்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்றார்.* எனவே, ஊழல் கண்காணிப்பு துறை சீராய்வு மனு தாக்கல் செய்ததில் எந்த தவறும் இல்லை என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி, “மாவட்ட நீதிபதி எவ்வாறு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்தார் என்பது புரியவில்லை. இந்த வழக்கை அவர் விசாரித்த தன்மையும் கண்டனத்திற்குரியது” என்று கூறி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பில்..
IAS,IPS பணியில் உள்ள அதிகாரிகள் மீது அரசின் முன் அனுமதி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய முடியாது என விதிகள் உள்ளது. இதை விசாரணை நீதிமன்ற நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.
இந்த வழக்கை விசாரணை செய்த தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இயந்திரத்தனமாக விசாரணை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கு முதல் நாள் விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளவில்லை.
எனவே தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஆசிஸ் ராவத் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
*வழக்கின் தொடக்கத்திலேயே சீராய்வு மனுவை தாக்கல் செய்து இடைக்காலத் தடை பெற்று, தற்போது முழுமையாக ரத்து செய்த உயர் நீதிமன்றத்திற்கும், மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னாவிற்கும் காவல்துறை அதிகாரிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.*