Vishal case mhc order notice
பத்து கோடி ரூபாய் டெபாசிட் செய்ய விஷாலுக்கு மேலும் கால அவகாசம் வழங்கலாமா என்பது குறித்து லைக்கா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வழக்கு எண்ணில் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய ஆறு வார கால அவகாசம் வழங்கக் கோரி விஷால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம்,
நடிகர் விஷாலுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாகவும், பத்து கோடி ரூபாய் பணத்தை செலுத்துவதற்கு 6 வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கால அவகாசம் வழங்குவது குறித்து பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 10ம் தேதி தள்ளிவைத்தனர்.