Appeal against hanging orders reserved. நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் துக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து குற்றவாளி சதீஷ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் காதலித்து வந்தனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து 2024 ம் தேதி டிசம்பர் 30 ம் தேதி தீர்ப்பளித்தது.

மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல சதீஷ் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. சதீஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல். இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. மரண தண்டனை விதிக்கத்தக்க, இது அரிதிலும் அரிதான வழக்கல்ல என வாதிட்டார்.

சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னா, காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல். இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, மூன்றாவது நாள் ரயில் வரும் வரை காத்திருந்து, ரயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டுள்ளார் என்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதால், தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இது திடீர் தூண்டுதலாலோ, உணர்ச்சிவசப்பட்டோ நிகழ்ந்தது அல்ல. அகங்காரம், பிடிவாதம் மற்றும் ஆணாதிக்க உணர்வில் நடந்த கொடூரமான, திட்டமிட்ட செயல் எனவும் வாதிட்டார்.

இல்லை என சொல்வதற்கு உரிமை கொண்ட பெண், தன் எண்னத்தை வெளிப்படுத்தும் போது அதனால் காயமடைந்த ஒரு ஆணின் அகங்காரத்தால் நடந்த கொடூரமான கொலை எனவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
……

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com