மதுரை ஆதினம் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு மதுரை ஆதினம் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதியது குறித்து மதுரை ஆதீனம், சர்ச்சையான வகையில் பேசியது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்,
வயதை சுட்டிகாட்டி விசாரனை அதிகாரி நேரில் சென்று விசாரணை செய்து கொள்ள அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் மதுரை ஆதினம் காவல்துறை விசாரனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீன் ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி,
மதுரை ஆதினத்தை அவர் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று காவல்துறை விசாரணை மேற்கொண்டதாகவும், அப்போது மதுரை ஆதினம் உடல் நிலை உள்ளிட்ட காரணங்களை கூறி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் ஆனால் 7 மணி நேரத்திற்கும் மேலாக மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு அது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆதினம் தரப்பில், பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, ஆகஸ்ட் 8 ம் தேதிக்குள் மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.