ஐஐடி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது

சென்னை ஐஐடி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்தார். மேற்குவங்காளத்தை சேர்ந்த அந்த மாணவி ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இதனிடையே, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியான மேற்குவங்காளம் டைமண்டு ஹார்பர் மாவட்டம் ராய்நகரை சேர்ந்த கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  அவரை மேற்குவங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி, சென்னை அழைத்துவர போலீசார் அனுமதி கேட்டார்கள்.ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளதால் அதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்து விட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில்,
கிங்சோ தெப்சர்மாவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோட்டூர்புரம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ், குற்றம் சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றும் மேலும் இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அதனால் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் உள்ளதால், அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதுகுறித்து கிங்சோ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 22ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.

You may also like...

Call Now ButtonCALL ME