7 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து
ஆம்பூர் கலவர வழக்கில், பைரோஸ் அகம்மது, முனீர்,சாதிக் அகம்மது,ஜான் பாஷா ஆகியோருக்கு
விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, ஷமீல் அகமது என்பவரை ஆம்பூர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி, 2015 ம் ஆண்டு ஜூன் 26 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி திரும்பிய ஷமீல் அகமது, உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காவல் துறையினர் தாக்கியதில் ஷமீல் அகமது இறந்து விட்டதாகக் கூறி, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மறுநாள் 2015ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி இரவு 7 மணியளவில், ஆம்பூரில், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த வேலுார் எஸ்.பி., செந்தில்குமாரி மீது கற்கள் வீசி தாக்கியதால் கலவரம் வெடித்து, போலீசார் தடியடி நடத்தினர். இதில், 15 பெண் போலீசார் உட்பட, 91 போலீசார் படுகாயமடைந்தனர். கலவரத்தில், 11 அரசு பஸ்கள், 7 போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட, 30 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், 4 பைக்குகள் தீயிட்டும் கொளுத்தப்பட்டன.
கலவரத்தில் தொடர்புடைய, 185 பேர் மீது, 12 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த திருப்பத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 22 பேரை குற்றவாளிக்ள் என அறிவித்து, மூன்று பேருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ஆறு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 14 பேருக்கு ஓராண்டு முதல் 4 ஆண்டு வரையும் சிறை தண்டனை விதித்து கடந்த ஆகஸ்ட் 28 ம் தேதி தீர்ப்பளித்தது. அதேபோல 161 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஃபைரோஸ் அகமது, முனீர்,சாதிக் அகமது, ஜான் பாஷா, நவீத்ம அகமது,ஆயாஸ் பாட்ஷா, மற்றும் தாபரேஸ் ஆகிய 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
அந்த மனுவில், அரசு தரப்பு சாட்சியத்தில் முரண்பாடுகள் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் தங்களுக்கு தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, ஆம்பூர் கலவர வழக்கில் பைரோஸ் அகமது, சாகித் அகமது, உள்பட 7 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
மேலும், மேல் முறையீட்டு மனுவுக்கு நவம்பர் 24 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஆம்பூர் நகர போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.