லீடர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் நடித்துள்ள “லீடர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து விளம்பர உலகை கலக்கினார் அதன் உரிமையாளர் அருள் சரவணன். அதைத்தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்து அறிமுகமான அருள் சரவணன், அதன்பின்னர் ‘லெஜண்ட் சரவணன்’ என உருவெடுத்தார்.

இதையடுத்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தில் கதாநாயகனாக நடித்து, படத்தையும் தயாரித்துள்ளார் லெஜண்ட் சரவணன். அவருடன், ஷாம், ஆண்ட்ரியா, லால், விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா பாஸ்கரன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தன் மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில், ஒரு தந்தையாக வில்லன்களை எதிர்கொண்டு எப்படி மகளைக் காப்பாற்றுகிறார் என்பதை கதைக்கருவாக கொண்ட படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே பலரது கவனத்தையும் ஈர்த்து 2 கோடி பார்வையாளர்களை நெருங்கி, படத்தின் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த லீடர் படம் நாளை (ஏப்ரல் 3) 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் லீடர் படத்தை சட்டவிரோதமாக 1404 இணையதளங்களில் அரசு மற்றும் தனியாரின் 26 இணையத்தள சேவை மற்றும் கேபில் டிவி நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படுவதை தடை விதிக்க வேண்டுமென லெஜண்ட் சரவணன் சார்பில் டி.ஸ்டான்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, லீடர் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும், படத்தை திரையரங்களில் காணவருவோர் தடுக்க வாய்ப்பாக அமைந்துவிடும் என வாதிட்டார்.

இதையடுத்து, லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லீடர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version