வாட்ஸ்அப் மூலம் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பலாம் : மும்பை உயர்நீதிமன்றம்

வாட்ஸ்அப் மூலம் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பலாம் : மும்பை உயர்நீதிமன்றம்

வாட்ஸ்அப் மூலம் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி அதை அவர்கள் பார்த்ததாக நீல குறி வந்தால் அதை பெற்றுக் கொண்டதாக பொருள் கொல்ளலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பையில் வசிக்கும் ரோகித் ஜாதவ் என்பவர் ஸ்டேட் வங்கி கடன் அட்டைக்கு ரூ.85000 பணம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதை ஒட்டி ஸ்டேட் வங்கி அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அதில் வட்டி, நீதிமன்ற செலவு உட்பட ரூ.1.17 லட்சம் ஜாதவ் வங்கிக்கு தரவேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பு நகலை வாங்கிக் கொள்ள ஜாதவ் மறுத்து விட்டார்.

பணம் கேட்டு ஸ்டேட் வங்கி தனது வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ்கள் அனுப்பி வைத்தது. ஆனால் அவை அனைத்தையும் பெற்றுக் கொள்ளாமல் ஜாதவ் திருப்பி அனுப்பி விட்டார். அதன் பிறகு அவரது மொபைல் நம்பரை பெற்றுக் கொண்ட வழக்கறிஞர் இந்த தீர்ப்பின் நகலை பி டி எஃப் வடிவில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார்.

அதற்கும்ஆதாரம் இல்லாததால் ஜாதவ் மீது ஸ்டேட் வங்கி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஜாதவின் வழக்கறிஞர் இந்த தீர்ப்பின் நகல்கள் மற்றும் நோட்டிஸ் எதுவும் ஜாதவ் பெறவில்லை என வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கௌதம் படேல், “ரோகித் ஜாதவுக்கு இந்த ஆவணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் வாங்க மறுத்ததால் அவருக்கு அனைத்தும் பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதை அவர் பெற்று படித்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. வாட்ஸ்அப் செய்திகளை பெற்றுக் கொண்டதற்காக நீல நிற குறியீடு தோன்றுகிறது. அதை சம்பந்தப்பட்டவர் பெற்றுக் கொண்டு விட்டதாக கொள்ளலாம். அத்துடன் அவர் அந்த பிடிஎஃப் ஆவணத்தை படித்து பார்த்ததும் தெரிய வந்துள்ளது. எனவே அவர் அந்த நோட்டிசில் கண்டபடி அனைத்து தொகையையும் அளிக்க வேண்டும்.” என தீர்ப்பளித்துள்ளார்

You may also like...