வாடகைத் தாய் சட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: குறைபாடுகளை காரணம் காட்டி பெற்றோர் ஆகும் உரிமையை பறிக்க கூடாது; மேஜிஸ்திரேட்டுகளுக்கு விரிவான வழிகாட்டுதல்கள்; சரோக்கசி சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களையும் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

*வாடகைத் தாய் சட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: குறைபாடுகளை காரணம் காட்டி பெற்றோர் ஆகும் உரிமையை பறிக்க கூடாது; மேஜிஸ்திரேட்டுகளுக்கு விரிவான வழிகாட்டுதல்கள்; சரோக்கசி சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களையும் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு*

*மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா (Amicus Curiae), மாநில அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நன்றி தெரிவித்து பாராட்டு*

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர், வாடகைத் தாய் (Surrogacy) முறையில் பிறக்கவுள்ள குழந்தைக்கு பெற்றோர் உரிமை (Parentage) மற்றும் காவல் உரிமை (Custody) வழங்கக் கோரி நீதித்துறை நடுவர் (மேஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குழந்தை பெற விரும்பிய பெண்ணுக்கு 50 வயதை கடந்துவிட்டது என்றும், வாடகைத் தாயின் கணவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை என்றும் காரணம் காட்டி, சரோக்கசி (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் கோரப்பட்ட நிவாரணத்தை வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தம்பதியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி ஷமீம் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் எழுந்த முக்கிய சட்டப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா Amicus Curiae (நீதிமன்ற உதவியாளர்) ஆக நியமிக்கப்பட்டார்.
விசாரணையின்போது, குழந்தை பெற விரும்பும் பெண் 50 வயதை பூர்த்தி செய்து 51 வயதை அடையும் வரை சரோக்கசி சட்டத்தின் கீழ் தகுதியுடையவராக கருதப்பட முடியுமா என்பதும், வாடகைத் தாயின் கணவரை நீதித்துறை நடுவர் கட்டாயம் விசாரிக்க வேண்டுமா என்பதும் முக்கிய சட்டப்பிரச்சினைகளாக எழுந்தன.
Amicus Curiae ஆக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சரோக்கசி (ஒழுங்குமுறை) சட்டம் என்பது குழந்தை பெற விரும்பும் தம்பதியினர், வாடகைத் தாய்மார்கள் மற்றும் பிறக்கவுள்ள குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க இயற்றப்பட்ட நலம் சார்ந்த (Beneficial) சட்டம் என்பதால், அந்த நோக்கத்தை முன்னிறுத்தும் வகையில் முடிவுகளை கையாள வேண்டும் என்றும், தேவையற்ற அல்லது சிறு குறைபாடுகளை காரணம் காட்டி குழந்தை பெறும் உரிமையை மறுக்கக் கூடாது என்றும் வாதிட்டார். மேலும், ஒரு சட்டப்பிரிவுக்கு இரண்டு விளக்கங்கள் சாத்தியமாக இருந்தால், அந்தச் சட்டத்தால் பயனடைய வேண்டியவர்களுக்கு சாதகமான விளக்கத்தையே நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கேரள உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு (Division Bench) வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, குழந்தை பெற விரும்பும் பெண் 50 வயதை பூர்த்தி செய்திருந்தாலும், 51 வயதை அடையும் வரை சட்டப்படி தகுதியுடையவராகவே கருதப்பட வேண்டும் என்று வாதிட்டார். அதேபோல், உரிய அதிகாரிகள் வழங்கிய தகுதிச் சான்றிதழ்களை நீதித்துறை நடுவர் மறுபரிசீலனை செய்யவோ அல்லது மேல்முறையீட்டு அதிகாரியைப் போல செயல்படவோ முடியாது என்றும் வாதிட்டார். உச்சநீதிமன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள், சட்டத்தின் நோக்கம் மற்றும் சட்டமன்றத்தின் எண்ணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அதையே தனது தீர்ப்பிலும் பிரதிபலித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷமீம் அகமது, மாவட்ட மருத்துவ வாரியம் மற்றும் உரிய அதிகாரிகள் வழங்கிய தகுதிச் சான்றிதழ்களை நீதித்துறை நடுவர் மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும், அவரின் அதிகாரம் பிறக்கவுள்ள குழந்தையின் பெற்றோர் உரிமை மற்றும் காவல் உரிமை தொடர்பான உத்தரவை வழங்குவதில் மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும், 50 வயதை பூர்த்தி செய்த பெண் 51 வயதை அடையும் வரை சரோக்கசி சட்டத்தின் கீழ் தகுதியுடையவராகவே கருதப்பட வேண்டும் என்றும், வாடகைத் தாயின் கணவரை கட்டாயம் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை சரோக்கசி சட்டத்தில் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சரோக்கசி சட்டம் ஒரு நலவாய்ந்த சட்டம் என்பதால், அதன் நோக்கத்தை பாதிக்கும் வகையில் மனுக்களை நிராகரிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், வழக்கை மீண்டும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, தீர்ப்பில் வகுக்கப்பட்டுள்ள சட்டக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் புதிதாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு உத்தரவிட்டது. மனுதாரர்கள் புதுப்பிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழை தாக்கல் செய்தவுடன், அந்த மனுவை நான்கு வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல், சரோக்கசி (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் இனி நீதித்துறை நடுவர்கள் முன்பு தாக்கல் செய்யப்படும் அனைத்து பெற்றோர் உரிமை (Parentage) மற்றும் காவல் உரிமை (Custody) மனுக்களையும், இயன்றவரை நான்கு வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை உறுதி செய்யும் வகையில், சரோக்கசி சட்டத்தின் கீழ் மனுக்களை விசாரிக்கும் நீதித்துறை நடுவர்கள் பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுத்துள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதற்காக, இத்தீர்ப்பின் நகலை அனைத்து முதன்மை மாவட்ட நீதிபதிகளுக்கும் அனுப்பி, அவர்கள்மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து நீதித்துறை நடுவர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய தீர்ப்புகள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் மற்றும் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கி, வழக்கை முடிவு செய்வதில் நீதிமன்றத்திற்கு பெரிதும் உதவியதாக Amicus Curiae ஆக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவுக்கு நீதிமன்றம் நன்றியைத் தெரிவித்துள்ளது. அதேபோல், மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் மற்றும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆகியோரும் வழங்கிய மதிப்புமிக்க உதவி மற்றும் ஆலோசனைகளுக்காக அவர்களுக்கும் நீதிமன்றம் தனது நன்றியையும் பாராட்டையும் பதிவு செய்துள்ளது.

*சரோக்கசி (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் நீதித்துறை நடுவர்களின் அதிகார வரம்பை தெளிவுபடுத்தி, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை உருவாக்கும் வகையில் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, சரோக்கசி தொடர்பான வழக்குகளில் முக்கிய முன்னுதாரணத் தீர்ப்பாக அமையும் என்று சட்ட வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.*

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version