பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படித்தவர்களை மட்டுமே தமிழாசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படித்தவர்களை மட்டுமே தமிழாசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 69 குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2020 ஜனவரியில் விண்ணப்பங்களை வரவேற்றது.

இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படிக்காதவர்களும், தொலைதூர கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் பயனடைந்துள்ளதாக கூறி, சக்திராவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, பள்ளிக் கல்வியும், பட்டப்படிப்பும் தமிழ் வழியில் படித்தவர்களை மட்டும், தமிழ் மொழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், தொலைதூர கல்வியில் படித்தவர்களுக்கு தமிழ் மொழியில் படித்ததற்கான சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், போலி சான்றிதழ்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

பிரதான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழ் வழியில் படித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் உள்ள இடையூறுகளை களையவே, தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட கல்வித் தகுதியை மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பும், பட்டப்படிப்பும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

பத்தாம் வகுபு, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் போது அதில், தமிழ் வழியில் படித்தவர்கள் எனக் குறிப்பிடும்படி பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும் எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

போலிச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு எதிரான புகார் குறித்த விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும், அதன் பின் பிற பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படித்தவர்களை மட்டுமே தமிழாசிரியர்களாக நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சமஸ்கிருதத்தை விட பழமையான தமிழ்மொழியின் தொன்மையை பட்டியலிட்டுள்ள நீதிபதிகள், தற்போது பெற்றோர் தங்கள் குழந்தைகளை தமிழ் வழியில் படிக்கச் செய்யாமல் ஆங்கில வழியில் படிக்கச் செய்வது அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை தாய்மொழியில் படிக்கச் செய்வதன் மூலம் மட்டுமே தாய்மொழியை பாதுகாக்க முடியும் எனவும், இல்லாவிட்டால் தமிழர்களே தமிழை மறந்து விடும் நாள் விரைவில் வந்து விடும் எனவும் நீதிபதிகள் தங்கள் ஆதங்கத்தை தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

You may also like...