நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுவது கண்டறியப்பட்டால், கடுமையான சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை aag ravinthiren
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுவது கண்டறியப்பட்டால், கடுமையான சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை
சென்னை உயர்மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பளித்த
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் சென்னை நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படும் என இணையதளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க கோரி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி குறித்து தவறாக சித்தரிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தக கண்காட்சி இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஜனவரி 7 ம் தேதி நடைப்பெற்ற புத்தக கண்காட்சியில் தீவிர சோதனை நடத்தப்பட்டதாகவும், கீழைக்காற்று பதிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இரு அரங்குகளில் சோதனை செய்த போது சம்பந்தப்பட்ட புத்தகம் எதுவும் அங்கே விற்பனை செய்யப்படவில்லை என தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் கீழைக்காற்று பதிப்பக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், அப்போது அவர்கள் அளித்த எழுத்துப்பூர்வமான விளக்கத்தில், சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகம் கண்காட்சியில் வெளியிடப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லை என்று உறுதியளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் கீழைக்காற்று பதிப்பகம் கடந்த ஜனவரி 1 ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள், கேலிச்சித்திரங்கள் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும்,
எதிர்காலத்தில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் புத்தகங்கள் ஏதேனும் கண்காட்சியிலோ அல்லது மின்னணு ஊடகங்களிலோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.