நீதிபதி கார்த்திகேயன், ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக்
கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே அவரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாகவும், ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரில், ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவில் ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை செப்டம்பர் 7 ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தன்னை தாக்கியது தொடர்பாக அளித்த புகாரில் எதிர் தரப்பில் யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் தனக்கு எதிராக மட்டுமே கைது நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய் புகாரில் காவல்துறை தன்னை கைது செய்துள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.