நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.95.44 கோடி ஓய்வூதிய நிலுவைத் தொகையாக வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சி

சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் 95.44 கோடி ரூபாயை எப்போது வழங்கபடும் என்பது குறித்து நிதித்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி ஓய்வுக்கு பின் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க வழங்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற தேன்மொழி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை பல்கலைகழகமும், தமிழக அரசும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை பல்கலைகழக பதிவாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மனுதாரர் தேன்மொழிக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் ரூ.64 லட்சமும் முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாகவும், அதுதவிர சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 முதல் தற்போது வரை 10 ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற 87 பேராசிரியர்களுக்கு 42 கோடியே 19 லட்சத்து 19 ஆயிரத்து 685 ரூபாய், 249 ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு 46 கோடியே 50 லட்சத்து 23 ஆயிரத்து 884 ரூபாயும், 129 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 கோடியே 74 லட்சத்து 77 ஆயிரத்து 516 ரூபாய் என
மொத்தமாக ரூ. 95கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 85 ரூபாய் அளவிற்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், இந்த தொகைகளை விடுவி்க்க தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல தமிழக அரசின் நிதித்துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தன்னாட்சி நிறுவனமான சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி மொத்தம் ரூ. 318 கோடி கார்பஸ் நிதியாக இருப்பு உள்ளதாகவும், பல்வேறு நிதிச்சுமைகளுக்கு இடையே சென்னை பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைகளை படித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.95.44 கோடி ஓய்வூதிய நிலுவைத் தொகையாக வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும்
கல்விக்காக தங்கள் வாழ்நாளை அர்பணிக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணி ஓய்வுக்குப்பிறகு கிடைக்கும் ஓய்வூதிய பணப்பலன்கள் தான் அவர்களின் கடைசிகால வாழ்வுக்கான வாழ்வாதாரம் என்பதை அரசு இயந்திரம் மறந்து விடுவதாக வேதனை தெரிவித்தார்.

சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் 95கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 85 ரூபாயை எப்போது வழங்கபடும் என்பது குறித்து நிதித்துறைச் செயலாளர் டி.உதயச்சந்திரன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவி்ட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com