நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் /

சென்னை, மே.13-

கும்பகோணம் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நான்கு மாதங்கள் கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம், தவறினால் கும்பகோணம் மாநகராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளங்கள் ஆக்கிரமிப்பு
கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றஉ வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்ததால், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் பி.அமுதா, இந்து அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப், கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் உள்ளிட்டோர் மீது சென்னை ஐகோர்ட்டில் யானை ராஜேந்திரன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தற்போது குளங்களுக்குள் விடப்பட்ட வீடுகளின் கழிவு நீர் குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது என்று கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குழாய் அகற்றப்பட்டுள்ளது குறித்து புகைப்படத்துடன் கூடிய பிரமாண மனுவை கமிஷனர் தாக்கல் செய்யவேண்டும். அதை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடவோம்.
எம்.எல்.ஏ., தொகுதி நிவாரண நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் குளத்துக்குள் ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்து ரேஷன் கடை காலி செய்யப்பட்டு விட்டது. இந்த கட்டிடத்தை இடிக்க நடவக்கை எடுப்பதாக மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.

எனவே, 15 நாட்களுக்குள் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, அதுகுறித்த தகவலை மாவட்ட நீதிபதிக்கு கமிஷனர் தெரிவிக்கவேண்டும்.
மேலும், ஓலை பட்டினம் வாய்கால் அருகே அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதனால், இந்த வாய்கால் அகலத்தை குறைக்க மாநகராட்சி கமிஷனர் செயல்படுகிறார். இந்த குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓலை பட்டினம் குளத்தை சுற்றி மதில்சுவர் கட்ட ரூ.13 கோடியே 25 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், கலெக்டர் உத்தரவின்படி இந்த டெண்டர் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்று யானை ராஜேந்திரன் கூறினார்.
எனவே, இந்த வாய்கால் குறித்தும் மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து, வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் சரியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறதா? என்பதை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கும்பகோணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 44 குளங்களில், 7 குளங்களில் ஆக்கிரமிப்பு முற்றிளும் அகற்றி, குளங்கள் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 3 குளங்களில் மரங்கள் உள்ளன. 4 குளங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீதமுள்ள 26 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று மாவட்ட நீதிபதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஓலை பட்டினம் வாய்காலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மதில் சுவரை கட்ட வேண்டும். குளம், வாய்கால் எல்லாம் நீர்வளத்துறையின் ஆதாரம். எனவே, இங்குள்ள ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் நீர்வலத்துறை அகற்ற வேண்டும். இந்த பணி நடைபெறுகிறதா? என்பதை 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த உத்தரவுடன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம். 4 மாதங்களுக்குள் ஆக்கிரமிப்பு பணி முடியவில்லை என்றால், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், கும்பகோணம் மாநகராட்சி ஆகியவைகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதத்துடன் மீண்டும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம்.
கோர்ட்டு அவதமிப்பு வழக்கை விசாரணை எடுத்தவுடனே, இந்த அபராதத் தொகையை சென்னை ஐகோர்ட்டு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு செலுத்தி விடவேண்டும்.
மாவட்ட கலெக்டர், போதுமான அதிகாரிகளை நியமித்து ஆக்கிரமிப்புகளை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். வாய்கால், குளம் மீது தனி் நபர்கள் யாரையும் பாலம் கட்ட அனுமதிக்கக் கூடாது. தேவைப்படும் இடத்தில் மாநகராட்சி நிர்வாகமே கட்டுக் கொடுக்க வேண்டும்.
ஐகோர்ட்டு அனுமதி இல்லாமல், குளங்கள், வாய்கால் அருகே கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது. இதுதவிர நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் மாவட்ட நீதிபதிக்கு 15 நாட்களுக்குள் ரூ.2½ லட்சத்தை ஊதியமாக வழங்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
………….

You may also like...

Call Now ButtonCALL ME