நிலத்தை விற்பதாக கூறி ரூ. 47 லட்சம் பண மோசடி செய்ததாக பதிவான வழக்கில், சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை மற்றும் முன்னாள் ராணுவத்தினரான அவரது கணவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலத்தை விற்பதாக கூறி ரூ. 47 லட்சம் பண மோசடி செய்ததாக பதிவான வழக்கில், சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை மற்றும் முன்னாள் ராணுவத்தினரான அவரது கணவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மூலப்பாதையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான இந்திராவும், முன்னாள் ராணுவத்தினரான அவரது கணவர் மாதையனும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை கல்லப்பாளையத்தை சேர்ந்த செந்தாமரை என்பவரிடம் ரூ. 56 லட்சத்துக்கு விற்பதற்காக விலைபேசி, ரூ. 47 லட்சம் அட்வான்ஸ் பெற்றதாக கூறப்படுகிறது.
நிலத்தையும் பதிவுசெய்யாமல், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என செந்தாமரை அளித்த புகாரில், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்திரா மற்றும் மாதையன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரரிடன் ரூ. 7 லட்சம் மட்டுமே வங்கி கணக்கின் மூலம் அட்வான்சாக பெற்றதாகவும், வேறு எந்த தொகையும் எந்த விதத்திலும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. வழக்கு நடைமுறையின்போதே ரூ. 7 லட்சத்தை திருப்பு செலுத்திவிட்ட நிலையில், விற்பனை ஒப்பந்தத்தை மீறியதாக தங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என வாதிடப்பட்டது.
புகார்தாரர் தரப்பில் ரூ. 7 லட்சம் வங்கி மூலமாகவும், ரூ. 40 லட்சம் ரொக்கமாகவும் கொடுக்கப்பட்டதாகவும், அந்த தொகை மோசடி செய்யப்பட்டதாகவும் கூறி, முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில் புகார்தாரரிடம் மனுதாரர்கள் ரூ. 47 லட்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளதால், முன் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ராஜசேகர், ஒப்பந்தத்தை நிறைவேற்றாதது தொடர்பான இந்த உரிமையியல் தன்மையுடைய விவகாரத்தில் கைது செய்து விசாரிக்க அவசியம் இல்லை என கூறி மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இருவரும் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ. 20 ஆயிரத்துக்கான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நிபந்தனை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்பின்னர் மூன்று வார காலத்திற்கு தினமும், அதன்பின்னர் தேவைப்படும்போதும் காவல்துறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.