நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மேற்படிப்பில் சேர கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மேற்படிப்பில் சேர கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், தண்டலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கான 5 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

அவரது கோரிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்தது. இதை எதிர்த்து அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட தலைநகரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியதால், ஊக்க மதிப்பெண் சலுகையை வழங்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் அருண்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளதால், கிராமப்புறங்களில் பணியாற்றியோருக்கான ஊக்க மதிப்பெண்ணை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்காக கிராமப்புறம், மலைப்பகுதி, தொலைதூர பகுதிகளை வரையறுத்த நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, மனுதாரருக்கு ஊக்கமதிப்பெண் பெற தகுதியில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதை ஊக்குவிக்கவே, மேற்படிப்புகளில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறதே தவிர, நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், அப்படி ஊக்க மதிப்பெண்கள் வழங்கினால், அது ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் நோக்கத்தையே வீழ்த்தி விடும் எனத் தெரிவித்தனர்.

நகரங்களில் இருந்து வெகு தொலையில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமே ஊக்க மதிப்பெண் பெற உரிமை உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

You may also like...

Call Now ButtonCALL ME