திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க முடியாது என்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் தாக்கல் செய்த பொது நல மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத்தை விழாவிற்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் அனைவரும் அனுமதிக்கப்படும்போது கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி நேற்று வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும், 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள் என்றும், இரண்டு நாட்களில் 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள் என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார்.  கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இப்போதும் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

அரசின் நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய  அறிவுறுத்தி பிற்பகலுக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் என 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்க முடியும் என்றும், அவர்கள் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 18, 19, 20 தேதிகளில் கட்டளைதாரர்களுக்கு மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தீபத்திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்து பக்தர்களை அனுமதிப்பர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தீபத்திருவிழாவை இணைய தளத்திலோ அல்லது தொலைகாட்சிகளிலோ காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கட்டளைதாரர்கள், பக்தர்கள் என அனைவருமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பக்தர்கள் பின்பற்ற அறிவுறித்தி வழக்கை முடித்துவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version