தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து நவம்பர் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து நவம்பர் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு சொந்தமான 83.26 ஏக்கர் நிலத்தில், 21 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, வாடகை வசூலிக்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமில் உள்ள மீதமுள்ள 62 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், எந்த அடிப்படையில் கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன என்பது குறித்தும் ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், முறையான அறிக்கையை தாக்கல் செய்ய ஏதுவாக, நிலத்தை அளவீடு செய்வதற்காக அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...