கே.சந்துரு மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி டாக்டர் மரியா கிளீட் அளித்துள்ள பரபரப்பான தீர்ப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தினப் பரிசு
-கே.சந்துரு
மேனாள் நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்
நீதிபதி டாக்டர் மரியா கிளீட் அளித்துள்ள பரபரப்பான தீர்ப்பு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தினப் பரிசாகக் கிடைத்துள்ளது. மக்களுக்கு மதுவும் அதன் ஊழியர்களுக்கு கஷாயமும் கொடுத்துவந்த டாஸ்மாக்கின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்கள்.
1970ம் வருடமே கலைஞர் ஆட்சியில் விடுமுறை தின சட்டம் திருத்தப்பட்டு மே 1-ந்தேதி ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது இந்தியாவிலேயே முதன்முறையாகும். 1983ல் துவக்கப்பட்ட அரசு கம்பெனியான டாஸ்மாக் ஊழியர்களுக்கு அந்த சலுகை மறுக்கப்பட்டது. 30.4.2010 அன்று ராமசுந்தரம் என்ற ஊழியர் மே தின விடுமுறை கேட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை சட்டம் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. அதற்கு அடுத்த நாள் மே தினமாக இருப்பதால் அதற்கு முந்தைய நாள் மாலை 6 மணிக்கு மேல்முறையீடு செய்து தடையுத்திரவு பெற்றது டாஸ்மாக். அவர்களுடைய தொழிலாளர்கள் பாசம் எப்படி என்பதை இந்த ஒரு சம்பவமே விளக்கும்.
ஆனால் இது குறித்து பொதுமேடைகளில் விவாதம் எழுப்பப்பட்டதனால் கலைஞர் அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே 1-ந்தேதி விடுமுறை அறித்தது எப்படி என்று தெரியுமா? விடுமுறைக்கான சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்று வாதாடிய டாஸ்மாக் மே 1-ந்தேதியை கட்டாய மதுவிலக்கு தினமாக அறிவித்தது.
இப்படித்தான் எந்தவொரு சட்டமும் தங்களுக்குப் பொருந்தாது என்றே வாதாடி வந்த டாஸ்மாக்குக்கு நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கண்டனக் கணைகளும் எந்த அளவுக்கு ஒரு ஏகபோக நிறுவனம் தொழிலாளர் சட்டங்களை அவமதிப்பார்கள் என்பதற்கான சான்று.
மாநில அரசுக்கு சுமார் ரூ.50000 கோடி வருமானம் ஈட்டித் தரும் டாஸ்மாக்கில் மொத்த நேரடியான ஊழியர்களே 24000 பேர் மட்டுமே. போக்குவரத்து, கிட்டங்கி, சுமை தூக்கும் தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் இவர்கள் அனைவரையுமே ஒப்பந்தத்தத் தொழிலாளர்களாக வைத்திருக்கும் ஒரே அரசு நிறுவனம் டாஸ்மாக் மட்டுமே. பொது நிறுவனம் என்றால் அவர்கள் மாதிரி முதலாளிகளாக இருக்க வேண்டுமென்று ஒரு நியதி உண்டு. அந்த நியதிகளெல்லாம் டாஸ்மாக்குக்கு வெறும் உதவாத சொற்களே.
1983-ல் ஆரம்பிக்கப்பட்டாலும் முதல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் 2004-ல் டாஸ்மாக் நேரடியாக மதுபானக் கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனையில் ஏகபோக உரிமையை கையில் எடுத்தனர். இன்று விஸ்வரூபம் எடுத்துள்ள அந்த நிறுவனத்தைப் பற்றித்தான் தினசரி செய்திகளில் வாசிக்கிறோம். அமலாக்கத்துறையின் திடீர் ஆய்வு, துறையின் அமைச்சர் யூ-டியூபர் ஒருவர் மீது தன்னைப் பற்றி செய்திகள் வெளியிடக்கூடாது என்று தடை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செய்திகள் தருவதை மறுப்பது, தொழிலாளர் சட்டங்களிலிருந்து விதிவிலக்கு இப்படி அந்நிறுவனம் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதைப் பார்க்கலாம்.
அரசுக்கு ரூ.50000 கோடி வருமானம் இருந்தாலும் டாஸ்மாக் கம்பெனி நஷ்டத்தில்தான் நடக்கிறது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? வருடத்தின் கடைசி மாதத்தில் டாஸ்மாக் வருமானத்தையெல்லாம் விற்பனைக் கட்டணம் (vending fee) என்று அரசு எடுத்துக் கொள்ளும். அதனால் வரவு எட்டணா செலவு பத்தணா என்று டாஸ்மாக் நஷ்டத்தில் நடப்பதாகவும் அதனால் வருமான வரி கட்ட வேண்டாமென்றும் நீதிமன்றத்தில் இன்றைக்கும் வாதாடி வருகிறது.
மற்றொரு பக்கத்தில் விற்பனை ஊழியர்கள் முறைகேடாக செயல்படுகிறார்கள் என்று கூறி விசாரணையின்றி பதவி நீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து அவர்கள் தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கில் தாக்கல் செய்யப்பட்டது. இப்படிப் பெருகிவரும் வழக்குகளை முறைப்படுத்தும் விதமாக 2010ம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக்குக்கு உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவின்படி டாஸ்மாக்குக்கு நிரந்தர நிலையாணை சட்டம் பொருந்துமென்றும் அவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு நிலையாணைகள் தயார் செய்து அவற்றிற்கு சான்றிதழ் பெறவேண்டுமென்றும் அதுவரை அரசாங்கம் இயற்றிய மாதிரி நிலையாணை அவர்களுக்குப் பொருந்தும் என்றும் தீர்ப்பளித்தது. மாதிரி நிலையாணையின்படி தொழிலாளிகள் இழைக்கும் ஒழுக்கக் கேடுகளுக்கு உரிய விசாரணை நடத்தும் முறைகளும் அதற்கான தண்டனைகளும் விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளன.
2010-ல் அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு பின்னர் பல்வேறு நீதிபதிகளால் வலியுறுத்தப்பட்டு டாஸ்மாக் ஊழியர்கள் தொடுத்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இருப்பினும் டாஸ்மாக் இதற்கெல்லாம் அசைந்துவிடுமா? 2014-ம் வருடம் அவர்களே ஒரு விதிமுறையை உருவாக்கி அதன்மூலம் தவறிழைக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு உடனடி தண்டனை வழங்குவதும் அவர்கள் ஊதியத்திலிருந்து சரக்கு குறைவுக்கு பணம் பிடிப்பதும் ஊழியர்களை தண்ணியில்லாக் காட்டிற்கு (கிட்டங்கிகளுக்கு) உடனடி மாற்றம் செய்வதும் விதிமுறைகளாக்கப்பட்டன.
மாதிரி நிலையாணை பொருந்தக்கூடிய நிறுவனங்களில் இதுபோன்ற தனிப்பட்ட விதிகளை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த முடியாது என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருப்பினும் அதற்கு டாஸ்மாக் செவிசாய்க்கவில்லை. தங்களுக்கு நிலையாணை சட்டம் பொருந்தாது என்றே கூறிவந்தனர். டாஸ்மாக்கை விட பெரிய அளவில் ஊழியர்கள் செயல்படும் மின்சாரவாரியம், அரசு போக்குவரத்துக்கழகங்கள், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற நிறுவனங்களுக்கெல்லாம் நிரந்தர ஆணை சட்டம் பொருந்தும் என்று பல தீர்ப்புகள் உள்ளன.
தனிப்பட்ட முறையில் டாஸ்மாக் உருவாக்கிய 2014 விதிமுறைகள் நிலையாணை சட்டத்திற்கு விரோதம் என்று கூறி சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டது. அவர் பகாசுர டாஸ்மாக் நிறுவனத்தைப் பகைத்துக் கொள்வாரா? எனவே இருபக்கமும் பொருந்தும்படி ஒரு தீர்ப்பை அளித்தார். அதன்படி டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிரந்தர நிலையாணை சட்டம் பொருந்தும் என்றும் அதேசமயத்தில் 2014 விதிமுறைகள் அதற்கு துணையாக இயங்கும் என்றும் அவர் வழங்கிய தீர்ப்பு விசித்திரமானது.
இதையெதிர்த்து தொழிற்சங்கம் 2020ல் போட்ட வழக்கில்தான் ஐந்து வருடங்கள் கழித்து உயர்நீதிமன்றம் தன்னுடைய சரவெடி தீர்ப்பைக் கொளுத்திப் போட்டுள்ளது. காலம் கழித்துப் பெறப்பட்டாலும் நீதியின் உண்மை நிலையை எடுத்துக் கூறும் 141 பக்கங்கள் அடங்கிய அந்த தீர்ப்பு டாஸ்மாக்குக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் ஒரு பாடமாக விளங்கும்.
நீதிபதி மரியா கிளீட் அளித்துள்ள அந்த தீர்ப்பில் இதுவரை டாஸ்மாக் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அப்பட்டமாக மீறிவருவதை குறிப்பிட்ட நீதிபதி டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிலையாணை சட்டம் பொருந்துமென்றும் அதனால் டாஸ்மாக் தன்னிச்சையாக உருவாக்கிய 2014ம் விதி சட்டவிரோதமென்றும் இதுவரை நிலையாணையை தயார் செய்து சான்றிதழ் பெறாத டாஸ்மாக் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு மேலும் டாஸ்மாக் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பதற்கும் வழிவகை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான தீர்ப்புகள் போல் உலர்ந்த வார்த்தைகளால் பொருண்மைகளையும் தீர்ப்புகளின் முன்னுதாரணங்களையும் பட்டியலிடும் வார்த்தைக் கோவைகளாக இல்லாமல் இந்த நெடிய தீர்ப்பு ஒரு இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருப்பதையும் பார்க்கலாம். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ”வெனிஸ் நாட்டு வணிகன்” என்ற நாடகத்தில் வரும் ஈவு இரக்கமற்ற கந்துவட்டி பேர்வழியான ஷைலாக்கின் வசனத்துடன் துவங்கும் இத் தீர்ப்பில் வெனிஸ் நகர நீதிமன்றத்தைக் குறை கூறும் வசனம் இடம்பெறுகிறது. இதில் வரும் கதாபாத்திரமான ஷைலக் போன்ற நிறுவனம்தான் டாஸ்மாக் என்பதை கூறாமல் கூறுகிறார் நீதிபதி.
எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் திருந்தாத டாஸ்மாக்குக்கு தீர்ப்பின் இறுதியில் விவியலித்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவ்வசனம் எரேமியாவில் கூறுவது டாஸ்மாக்குக்குக் கூறும் அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வசனமானது:
”உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன்
அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்” (எரேமியா 3:15)
தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனப்படுத்திவரும் டாஸ்மாக்கின் ஏகபோக தன்மையை விமர்சித்த நீதிபதி இனியும் நீதிமன்றம் வாளாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். 2025-ம் வருட மே தினத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கிடைத்த பரிசு இதுவாகத்தான் இருக்கும்.