தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி
சென்னை, ஜன.4-
சென்னை ஐகோர்ட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரைச் சேர்ந்த விவசாயி எஸ்.சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
தகட்டூர் மின் இரவை பாசனம் மற்றும் வடிகால் சீரமைப்பு சங்கத்தின் தலைவராக உள்ளேன். எங்கள் பகுதியில் நடைபெறும் விவசாயம் காவிரி நீரை சார்ந்து உள்ளது. காவிரி நீரை தேக்கி வைத்து விவசாயி ‘பம்ப்’ மூலம் வழங்கப்படுகிறது. இந்த பம்பிங் நிலையத்தில் உள்ள மோட்டார்கள் கடந்த 73 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வந்தன. அதில் சில மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களது கோரிக்கையை பரிசீலித்த அரசு, பழுதடைந்த 4 மோட்டார்களில் ஒரே ஒரு மோட்டாரை மட்டும் மாற்றியுள்ளனர். இந்த மோட்டார்கள் 73 ஆண்டுகளுக்கு முன்பு தகட்டூர் மின்சார பாசனத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த மோட்டார்களையும், பாசன கால்வாய்களையும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தது இல்லை.
இதுமட்டுமல்ல, தகட்டூர் முள்ளியாறு என்ற இடத்தில் உள்ள கால்வாய் ஷட்டரும், மருதூரில் உள்ள கால்வாய் ஷட்டரும் பழுதடைந்து, பாழடைந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து பல கோரிக்கை மனுக்களை கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம், உண்ணாவிரதம் இருக்கும்போதெல்லாம், அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், இதுவரை எந்த ஒரு தீர்வையும் ஏற்படுத்தித் தரவில்லை. மின்சார பாசனத் திட்டத்தை உருவாக்கியபோது, சுமார் 1,500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடந்தது. ஆனால், தவறான நிர்வாகத்தினால், இப்போது வெறும் 75 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விவசாயம் நடக்கிறது.
எனவே, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, பழுதடைந்த நிலையில் உள்ள 3 மோட்டார்களை மாற்றி, 14 கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை தூர்வாரி சீர் செய்யவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி, ‘‘இந்த கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுதாரர் உள்ளிட்டோர் புகார் மனுக்கள் அனுப்பியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக பதில் வந்தாலும், இதுவரை எடுக்கப்படவில்லை’’ என்று வாதிட்டார்.
கலெக்டர் தரப்பில், ‘‘பழுதாகியுள்ள 3 மோட்டார்களை சீர் செய்யப்படும். புதிய மோட்டார்களை கொள்முதல் செய்ய அரசின் நிதிக்காக காத்திருக்கிறோம். அதேபோல, கால்வாய்களில் உள்ள ஆகாய தாமரை உள்ளிட்டவைகளை அகற்றி, கரையை பலப்படுத்திக் கொடுக்கப்படும். இந்த பணிகளை செய்து முடிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும். அதற்குள் அனைத்து பணிகளும் செய்துக் கொடுக்கப்படும்’’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
……………………….