தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்குமாறு, மகளை தாயே தூண்டியுள்ளது துரதிருஷ்டவசமானது judge sunder mohan
புதுச்சேரியில், பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தைக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2023ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.சூரிய பிரபா, குடும்ப பிரச்னை காரணமாக விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட பின், பழி வாங்கும் வகையில் சிறுமியின் தாயார், தாமதமாக பொய் புகார் அளித்துள்ளதாக வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், தாமதமாக புகார் அளிக்கப்பட்டது என்பதற்காக மட்டுமே வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சம்பவ நடந்த உடனேயே புகாரளிக்காமல் விவகாரத்து வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின் தாயார் இந்த புகாரை அளித்துள்ளதாகக் கூறி, தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
மேலும், தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்குமாறு, மகளை தாயே தூண்டியுள்ளது துரதிருஷ்டவசமானது எனக் கூறிய நீதிபதி அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நிலைக்கத்தக்கதல்ல என, தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.