சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக ரீட்டா ஜான் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக ரீட்டா ஜான் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த முனைவர் ஆர்.மோகன்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்ட்ம பெற்று, படிப்பு, கருத்துரைகள், கட்டுரைகள், பல்வேறு குழுக்களின் உறுப்பினர், பாட புத்தகங்கள் உருவாக்குவதில் பங்கு, சர்வதேச அளவிலான கட்டுரைகள், கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகள் ஆகிய எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பல்கலைகழகத்திற்கான பதிவாளர் பணிக்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டபோது, உரிய ஆவணங்களுடன் மே 16ஆம் தேதி விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பித்த 15 பேரில் 24 ஆண்டுகள் 10 மாதங்கள் என்ற அதிகபட்ச தகுதியுடன் தனது பெயர் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 11 பேர் ஜூன் 24ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட நிலையில், 9 பேர் மட்டுமே கலந்துகொண்டோம் என்றும், அதில் 8 பேருக்கு குறுகிய நேரம் மட்டுமே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்த முனைவர் ரீட்டா ஜான் என்பவருக்கு மட்டும் 45 நிமிடங்களுக்கு மேல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, இதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
தனது சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்யாமலும், பரிசீலிக்காமலும் இருந்த தேர்வுக் குழுவால், ரீட்டா ஜான் பெயர் பதிவாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவரை பதிவாளராக நியமித்து ஜூன் 27ஆம் தேதி சென்னை பல்கலைகழக ஆட்சிமன்றக் குழு அறிவித்தது என்றும், அவசர கதியில் ஓரிரு நாட்களிலேயே இந்த பதிவாளர் நியமனம் நடைபெற்றுள்ளது என்றும் குறிபிட்டுள்ளார்.
ஆட்சிமன்றக் குழுவின் விதிமீறல், ரீட்டா ஜான் கொண்டுள்ள தகுதி, அனுபவம் ஆகியவற்றை விட அதிக தகுதிகளை கொண்ட தன்னை தேர்வு செய்யாதது குறித்து ஜூன் 27ஆம் தேதியே புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை என்றும் வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
பதிவாளர் நியமனம் தொடர்பான முழு செயல்முறைக்கும் சிண்டிகேட்டிலிருந்து எந்த ஒப்புதலோ அல்லது அனுமதியோ பெறப்படவில்லை என்பது பல்கலைக்கழக சட்டங்களை முற்றிலும் மீறுவதாக உள்ளது என்றும், துணைவேந்தர் இல்லாத நிலையில், சிண்டிகேட் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சி.சமயமூர்த்தி நியமிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணல் குழுவின் தலைவராகச் செயல்பட துணைவேந்தர் அல்லது ஒருங்கிணைப்பாளர் இருக்க வேண்டிய நிலையில், நிர்வாக குழுவில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டது, தேர்வுக் குழுவில் தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் நியமிக்கப்படுவதற்கு பதிலாக, சட்டத் துறை இணைச் செயலாளர் பி.அன்புச்செழியன் நியமிக்கப்பட்டது போன்று தேர்வுக்குழு அமைக்கப்பட்டதிலும் விதிமீறல்கள் உள்ளன என குற்றம்சாட்டியுள்ளார்.
தான் உட்பட 5 பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட நிலையில், தேர்வுக்குழுவில் இடம்பெற்றவர்களில் ஒருவர் கூட பட்டியல் இனத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டு முதல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருக்கும் ரீட்டா ஜான் தனது பதவியை ராஜினாமா செய்யாமலேயே, பதிவாளர் தேர்வு நடைமுறையில் கலந்துகொண்டதும் சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சென்னை பல்கலைக்கழக பதிவாளராக முனைவர் ரீட்டா ஜான் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பதிவாளர் தேர்வுக் குழுவை விதிகளுக்குட்பட்டு முறையாக அமைக்க உத்தரவிட வேண்டும், பதிவாளர் பதவிக்கான தேர்வு நடைமுறையில் அனைத்து தகுதிகளுடனும் இருக்கும் தன்னை முறையாக பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்துள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை பல்கலைக்கழகத்தின் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் தான் தாக்கல் செய்ய முடியும் எனக்கூறி இந்த வழக்கை சென்னைக்கு மாற்றுவதாக உத்தரவிட்டார்.
இந்த வழக்கை நிர்வாக நீதிபதிக்கு அனுப்பும்படி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.