சென்னை உயர் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் தமிழில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றத்தையும், மத்திய மற்றும் மாநில அரசுகளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்

தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக குடியரசு தலைவர் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அறிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென்று வழக்கறிஞர்களும், தமிழ்நாட்டு மக்களும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருவது, கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பின்னர் மத்திய அரசின் சட்ட அமைச்சகம் இந்த தீர்மானம் குறித்து உச்ச நீதிமன்றதின் கருத்தை கேட்டதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்காததை காரணம் காட்டி தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிப்பதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 348(2)-ன் படி குடியரசு தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிடுள்ள அமல்ராஜ், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348(2)-ன் படியும் அலுவல் மொழி சட்டத்தின் 7வது பிரிவின் படியும் உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிப்பதில் தடை ஏதும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

இத்தகைய சூழலில் உயர் நீதிமன்ற விசாரணைகள் மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், பிரதமரும் கருத்து தெரிவித்து வருவதன் அடிப்படையில், தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக குடியரசு தலைவர் அறிவிக்க வேண்டுமென பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற பார் கவுன்சிலின் பொதுக் குழுவில் ஒருமனதாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையான, சென்னை உயர் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் தமிழில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றத்தையும், மத்திய மற்றும் மாநில அரசுகளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

You may also like...

Call Now ButtonCALL ME