சீமைக்கருவேல tree case NSKJ aAnd BCVJ Senior adv wilson argued for govt sgp srinivasan assist
தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல

மரங்களை அகற்றுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பிலும், நீர்வளத்துறை சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 517 கிராமங்களில் சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நீர்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும், தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 25ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன் கேட்டுக்கொண்டார்.
சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுவதுடன் அவை மீண்டும் முளைக்காமல் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், தற்போது சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள கிராமங்களை நேரில் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், ஒவ்வொரு மாதமும் சில கிராமங்களை சீமை கருவேல மரங்கள் அற்ற கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கான இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த மரங்களை அகற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்தனர்.
……