காவல்துறை பதவி உயர்வுக்கான அரசாணைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக காவல்துறையில் இரண்டாம்

 

காவல்துறை பதவி உயர்வுக்கான அரசாணைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு முதல் நிலை காவலர்களாகவும்; முதல் நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாகவும், தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுகளில், 10 ஆண்டுகள் இரண்டாம் நிலை காவலர்களாக பணியாற்றியவர்களை முதல் நிலை காவலர்களாகவும்; ஐந்து ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக பணியாற்றியவர்களை தலைமைக் காவலர்களாகவும்; 10 ஆண்டுகள் தலைமைக் காவலர்களாக பணியாற்றியவர்களை சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் நியமிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த அரசாணைகளின் அடிப்படையில் தங்களுக்கு பதவி உயர்வு, பணப் பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளயைிலும் 600க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் ஒரு இரு நீதிபதிகள் அமர்வு, தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பதவிஉயர்வுக்கு பரிசீலிக்கலாம் எனவும், மற்றொரு அமர்வு, தலைமைக் காவலராக 10 ஆண்டுகள் உள்பட 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களை மட்டுமே பதவிஉயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும் என இரு வேறு தீர்ப்புகளை வழங்கியிருந்தது.

இதனால், இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கிருஷணன் ராமசாமி அடங்கிய முழு அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.

அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலங்களுக்கு பதவிகளை வகித்திருப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு பெற தகுதி உள்ளதாகவும், அரசாணைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்றும் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

You may also like...