கலைமகள் சபா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள்

கலைமகள் சபா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் வருவாய்த்துறை செயலாளர் மேற் பார்வையில் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், துறையின் செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

கலைமகள் சபா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கும் வகையில், நிறுவனத்துக்கு சொந்தமான 3,888 சொத்துக்களை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்க, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 33 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், சொத்துக்களை அடையாளம் காணும்படி, கடந்த ஏப்ரல் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிருப்தியை தெரிவித்த உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர்களை கண்காணித்து, அறிக்கையை பெற்று தாக்கல் செய்ய வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.அமுதாவை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

33 மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையுடன் ஆஜராகும்படி கூடுதல் தலைமை செயலாளர் பி.அமுதாவுக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ,தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய்துறை செயலாளர் அமுதா நேரில் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் காண மாவட்ட ஆட்சியர்கள் விரிவான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் 68 சிறப்பு சர்வேயர்களை நியமித்துள்ளதாக குறிப்பிட்டார். அதன் படி ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள் நூறுக்கும் மேற்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீதமுள்ள 26 மாவட்டங்களை பொறுத்தவரையில் விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை வரும் 22 ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.
கலைமகள் சபாவுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அடையாளம் காணுவதற்கான நடவடிக்கை, தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டு, ஐஏஎஸ் அதிகாரி அமுதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளனர். இந்த வழக்கில் முதலீட்டாளர்கள் சார்பாக வக்கீல்கள் சிங்காரவேலன், கமல்நாதன், சின்னதுரை ஆகியோர் ஆஜராகி. வாதாடினார்கள்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com