Tascmac time changed case mhc order notice

தமிழகத்தில் மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாற்றி கடந்த 2 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 உட்பிரிவு ஏ ன் கீழ், தொழிற்சங்க சட்டத்தின்படி , வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளதாக தெரிவித்துள்ளனர். எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதம் என்றும் இந்த அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால், பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

You may also like...