S m subramaniyam judge அரசு நிலங்களைத் தனியாருக்கு சட்டவிரோதமாக அரசு அதிகாரிகள் ஒதுக்கினால், பொதுச் சொத்துகளை அரசு அதிகாரிகள் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

அரசு நிலங்களைத் தனியாருக்கு சட்டவிரோதமாக அரசு அதிகாரிகள் ஒதுக்கினால், பொதுச் சொத்துகளை அரசு அதிகாரிகள் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சுகுமாரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வந்தவாசி தாலுகாவில் உள்ள மடம் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட கிராம நத்தம் நிலம், அந்தப் பகுதி மக்களுக்காக விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்ததாகவும்,
இந்த இடத்தில் 3 சென்ட் நிலத்தில் ரத்தினவேல் என்பவர் வீடு கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதியை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது, விதிமுறைகளுக்கு முரணாக என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்,
விளையாட்டு மைதானத்தில் வீடு கட்டுவதற்கு சட்டவிரோதமாக சிலருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து திருவண்ணாமலை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சிறப்பு வட்டாசியர் தாக்கல் செய்த அறிக்கையில், வீடற்ற ஆதி திராவிடர் மக்களுக்கு வீடு வழங்க மடம் கிராமத்தில் இடம் ஒதுக்குவதற்காக 1964இல் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும்
அதன் அடிப்படையில் வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் ரத்தினவேலுக்கு வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள இடம் விளையாட்டு மைதானத்திற்கான கிராம நத்தம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், வேறு கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும்,
கடந்த 2015ல் வழக்கு தொடர்ந்தும் இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். அந்த கட்டுமானத்தையாவது அதிகாரிகள் நிறுத்தியிருக்கலாம் என்றும், அதை அனுமதிப்பது
லஞ்சத்தை அனுமதிப்பது போலாகிவிடும் என எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்டவிரோதமாக அரசு நிலம் மற்றும் விளையாட்டு மைதானத்தை அதிகாரிகள் ஒதுக்கினால், இந்த அதிகாரிகளால் பொதுச் சொத்துகளைப் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
பொது இடத்தை தனியாருக்கு ஒதுக்குவது லஞ்சத்தை அனுமதிப்பது போலாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களை தனியாருக்கு விட்டுக்கொடுத்துவிடாமல் அரசு கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் என்றும்,
இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் தொடர அனுமதிப்பது மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, ஊழல் வழிகளில் தனிநபர்களுக்கு ஆதரவாக இத்தகைய பொது நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு தைரியத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

எனவே, கிராம மக்களுக்கான விளையாட்டு மைதானத்தில் இடத்தை ஒதுக்கிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வீட்டைஒரு மாதத்திற்குள் இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

CALL ME
Exit mobile version