Patta case நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை கட்டுமான பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து எட்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி. அணைக் கட்ட கொத்துப்பள்ளி கொட்டாவூர் கிராம மக்களை அரசு அங்கிருந்து வெளியேற்றியது. இந்த கிராம மக்களை சூலகிரி தாலுகா, துரிஞ்சிப்பட்டி கிராமத்திலும், கோட்டையூர் கிராமத்திலும் அரசு குடியமர்த்தியது. இந்த நிலையில் இந்த நிலம் வனப்பகுதி என்று கூறி இவர்களை இந்த கிராமங்களில் இருந்தும் வெளியேறும்படி வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த கிராமங்களைச் சேர்ந்த பெருமாள், விஜயலட்சுமி, மகேந்திரன், பெரியசாமி உள்ளிட்ட 272 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் அணை கட்டுவதற்காக எங்கள் முன்னோரை தற்போது வசிக்கும் கிராமங்களில் 70 ஆண்டுகளுக்கு முன்பு அரசு குடியமர்த்தியது.
இந்த கிராமங்களில் நாங்கள் வீடு கட்டி, விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் நிலமும் இல்லை.
இந்த நிலத்துக்கு பட்டா வழங்கும்படி 2023-ம் ஆண்டும், கடந்த மார்ச் 24-ம் தேதியும் ஊர் மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம் ஆனால் அந்த மனுகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எங்கள் கிராமங்களை தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, பஞ்சாயத்துக்கு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, வனத்துறை நிலம் என்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் 1975-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி. எங்களை கிராமங்களை விட்டு வெளியேறும்படி, இங்கு விவசாயம் செய்யக்கூடாது என்றும் வனத்துறையினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர், மனுதாரர்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலத்தை வனத்துறைக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை தவறானது. இவர்களுக்கு பட்டா வழங்கலாம் என்று ஓசூர் உதவி ஆட்சியர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி மாவட்ட ஆட்சியர்க்கு அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில், மனுதாரர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஓசூர் உதவி ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையில், மனுதாரர்களின் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, பட்டா வழங்குவது குறித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

Call Now ButtonCALL ME