Pallikaranai

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறுக்கும் பணிகள் நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 11 ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com