Msrj bench ஐந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறியதாக கூறி ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
புகாரை விசாரித்து முடித்து வைக்கப்பட்டு விட்டதாக விசாரணையின் போது காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; புகார்தாரருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இதை செய்யத் தவறிய செயல் நடைமுறை குளறுபடி எனக் கூறி, வழக்கு முடித்து வைக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேருக்கு எதிராக துறைரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
மேலும், இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்கத் தவறிய காவல் கண்காணிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்த நீதிபதி, 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி வகித்த, 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பி.சரவணன், எம்.ஸ்ரீ அபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயக்குமார் மற்றும் ஆர்.ராஜாராம் ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து காவல்துறை அதிகாரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை அதிகாரிகள் சார்பில் ஆஜரான கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் வழக்கறிஞர் தாமோதரன் , இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த உத்தரவில் இடம் பெற்றுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் ,எனவே மீதமுள்ள ஐவருக்கு எதிரான உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, ஐந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
