Mahenthra city
சென்னை மகிந்திரா சிட்டியில் கட்டப்பட்டுள்ள வில்லாக்களின் உரிமையாளர்களுக்கென தனிச் சங்கம் உருவாக்குவது அவசியம் தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மகிந்திரா சிட்டியில் “அக்வாலில்லி” என்ற சொகுசு குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டு வில்லா வகையிலான 151 வில்லா பங்களாக்கள், அப்பார்ட்மெண்ட் வகையில் 702 வீடுகள் கட்டப்பட்டன. இந்த அனைத்து வீடுகளுக்குமான நடைபாதை, பூங்கா, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம் அகியவற்றை கொண்ட பொது பயன்பாட்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை 2017ஆம் ஆண்டு முதல் அக்வாலில்லி வீடு உரிமையாளர் சங்கம் நிர்வகித்து வந்தது. வில்லா மற்றும் அப்பார்ட்மெண்ட் இணைந்த சங்கத்தின் மூலம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுசெய்து செயல்பட்டு வந்தது.
அதேபோல 2025ஆம் ஆண்டுக்கான பதிவையும் அந்த சங்கம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொண்டபோது, அக்வாலில்லி வில்லா உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் மற்றொரு விண்ணப்பமும் வந்துள்ளது. புதிய சங்கத்தின் விண்ணப்பத்தை ஏற்று தங்களது விண்ணப்பம் திருப்பி அளிக்கப்பட்டதை எதிர்த்து அக்வாலில்லி வீடு உரிமையாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றுக்கு சேர்த்து ஒரே சங்கம் ஏற்கனவே உள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தங்களுக்கு என ஒரு சங்கத்தை உருவாக்க உரிமை உண்டு என்றும், பொதுப்பயன்பாட்டு இடங்களில் உள்ள வசதிகள் மற்றும் பயன்பாடுகளை பயன்படுத்துவது தொடர்பாகத்தான் இரு குழுக்களுக்கும் இடையிலான முக்கிய பிரச்சினையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வில்லாக்கள் அருகில் உள்ள நிலம் அந்தந்த உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், ஆனால் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு UDS மூலம் கிடைத்த நிலம் மட்டுமே விற்கப்பட்டுள்ளதால் தங்கள் நலனை பார்க்க சங்கம் அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“வில்லா” என்ற சொல் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை என்றாலும், அந்த உரிமையாளர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட பொதுவான பகுதிகளைத் தவிர, இரு குழுக்களாலும் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட சில பொதுவான பகுதிகளும் உள்ளன என்பது ஆவணங்களிலிருந்து தெரிவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இரு சங்கங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதே சிறப்பாக இருக்கும் என யோசனை தெரிவித்துள்ளார்.
வில்லா உரிமையாளர்களுக்கென தனியாக பொதுவான பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியைப் பராமரிக்க வில்லா உரிமையாளர்கள் இடையே ஒரு தனி சங்கம் இருப்பது மிகவும் அவசியம் என்றும், அப்போதுதான் இரு தரப்பினரின் உரிமைகளையும் சமநிலைப்படுத்தும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், இரு சங்கத்தினரிடமும் புதிதாக விண்ணப்பங்களை பெற்று, சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.