Madras high court otders december22

    [12/22, 12:45] Sekarreporter 1: அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால் ஆக்கிரமிப்புகளிலிருந்து கோவில் நிலங்களை வருவாய் துறையால் மீட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பார் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பையூர் வீர ஆஞ்சநேய சாமி மற்றும் கோதண்டராம சாமி கோவில்கள், நாகமங்கலம் உள்ள அனுமந்தராய சாமி கோவில், பாலேகுளி பட்டாளம்மன் மற்றும் பெரியமலை பெருமாள் கோவில், பழைய அரசம்பட்டி வரதராஜ பெருமாள் கோவில், கூலிகானபள்ளி காகாசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றின் சொத்துகள் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டும், தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கோவில்களுக்கு சொந்தமாக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலங்களும், தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களும் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகளின் வசதிகேற்ப தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிபிட்டுள்ளார்.

    குறிப்பாக நாகமங்கலத்தில் தமிழக அரசு துறைகளிடமோ, அறநிலையத்துறையிடமோ அனுமதி பெறாமல் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி அளவிற்கு, 50 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதாகவும், கிரானைட் பாறைகள் சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்டதாகவும், டிசம்பர் 10ஆம் தேதி வரை இது நடந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கடந்த மே மற்றும் நவம்பர் மாதங்களில் அளித்த புகாரில், பத்திரப்பதிவுத்துறையில் சேலம் உதவி ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவில் இந்த கோவில்களின் நிலங்கள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யச் சொல்லியும் அறநிலையத்துறை வழஙகவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    கோவில் நிலங்களை பாதுகாப்பதற்கு ஏதுவாக வேலி அமைப்பதற்காக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பியும், அதையும் பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டு, இந்த 7 கோவில்களின் நிலங்களையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை வருவாய் கேட்கும்போது, அதை வழங்குவதற்கு அறநிலையத்துறைக்கு என்ன தயக்கம் என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், போதிய ஒத்துழைப்பு தராவிட்டால் வருவாய்த் துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை ஆணையர் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் மனுதாரர் ஆ ராதாகிருஷ்ணன் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு, அறநிலையத்துறை, கோவில்களின் நிர்வாகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை விசாரணையை ஜனவரி 4ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார்.
    [12/22, 13:19] Sekarreporter 1: மாநில பிரஸ் கவுன்சில் அமைக்க சட்டவிதிகள் உள்ளதா என இந்திய பிரஸ் கவுன்சில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த  வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிக்கையாளர் சங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி, இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க விதிகள் உள்ளனவா என்றும், மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்க சட்டங்கள் உள்ளனவா என தெரிவிக்கும்படி, இந்திய பிரஸ் கவுன்சில் தரப்பு வழக்கறிஞருக்கும், மனுதாரர் மற்றும் பிற வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தினர்.

    சட்டம் இல்லாமல் கவுன்சில் அமைக்க முடியாது என்பதால், உத்தரவை மறு ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
    [12/22, 14:35] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ள டெண்டர்களுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது..

    தமிழகம் முழுவதும்,
    டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் ஆகியவற்றுக்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
    அதன்
    அடிப்படையில் ‘அப்செட் பிரைஸ்’ என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிப்படை டெண்டர் விதிகளின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கான டெண்டரை இந்த மாதம் கோர வேண்டும் என்றும், பார்களை அமைக்க சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய மதுக்கூட ஒப்பந்தங்கள் ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும். மதுக்கூடத்தின் மாதாந்திர உரிம கட்டணம் அந்த 2 ஆண்டுகளுக்கு நிலையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டெண்டர் விதிகளை எதிர்த்து ஆர் ரவீந்திரன் உள்ளிட்ட பார் உரிமையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது அந்த வழக்கில்,
    ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களின் தடையில்லாச் சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
    எனவே டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்பே நில உரிமையாளரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றால் போதும் என தெரிவிக்கப்பட்டது ..இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி டெண்டருக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.. மேலும் டெண்டர் விண்ணப்பங்களை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்…
    [12/22, 15:52] Sekarreporter 1: உப்பள நிலங்களுக்கான வாடகையை உயர்த்தி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளங்கள், உப்பு உற்பத்தியாளர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலங்களுக்கான ஒதுக்கீட்டு கட்டணத்தை ஏக்கருக்கு 100 ரூபாயாகவும், வாடகையை ஏக்கருக்கு 120 ரூபாயாகவும் உயர்த்தி கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வாடகை மற்றும் நிலம் ஒதுக்கீட்டுக்கான கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும், பொது நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், 20 ஆண்டு குத்தகை காலம் முடிந்து விட்டதாகவும், அது தன்னிச்சையாக புதுப்பிக்கப்பட்டதாக கருத முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, உரிமம் எடுத்தவர்கள் நிலத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் எனவும், மீண்டும் குத்தகைக்கு டெண்டர் விடும் போது அதில் மனுதாரர்கள் பங்கேற்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.
    [12/22, 16:45] Sekarreporter 1: உடல்நலக்குறைவின் காரணமாக பொறியியல் படிப்பில் இருந்து பாதியில் இடைநின்ற மாணவி,
    படிப்பை தொடரும் வகையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1046 மதிப்பெண்கள் பெற்றிருந்த சென்னையை சேர்ந்த மாணவி நித்யா கடந்த 2016 ம் ஆண்டின் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வின் மூலம் உறுப்பு கல்லூரியான ஜேப்பியார் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (ECE)பிரிவில் சேர்த்துள்ளார்

    2016 முதல் 2020 வரையிலான 8 செமஸ்டர்களை கொண்ட கல்வியாண்டில், நான்கு செமஸ்டர்கள் வரை கல்லூரிக்கு சென்று வந்த அவர், உடல்நலக்குறைவின் காரணமாக 2018 முதல் கல்லூரிக்கு செல்லவில்லை,அதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் அவருக்கு மாற்றுச் சான்றிதழை வழங்கியதோடு அவரின் இடைநிற்றலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது

    உடல்நிலை சீரான சம்மந்தப்பட்ட மாணவி கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் ஜேப்பியார் கவ்வி நிலையத்தின் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்ததோடு
    ஜனவரி 2022 ல் நடைபெறவுள்ள 5 வது செமஸ்டருக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தியுள்ளார்.மாணவியின் மறுசேர்கைக்கு அனுமதி வழங்குமாறு கல்லூரி நிர்வாகம் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பித்த நிலையில்,அதனை பரீசிலித்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர், மாணவியின் மறுசேர்க்கைக்கான விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.படிப்பை தொடர வேண்டுமானால் மீண்டும் முதலாம் ஆண்டில் இருந்து தான் தொடங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது

    மறு சேர்க்கைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், ஐந்தாவது செமஸ்டர் தேர்வெழுத அனுமதி கோரியுள்ள மாணவியின் விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு உத்தரவிடகோரியும் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது

    அப்போது மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படிப்பை தொடர முடியாமல் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் சேர்வதற்கு 2008ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை வழிவகை செய்வதாகவும்,
    அண்ணா பல்கலைகழகத்தின் முடிவு அரசாணைக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்தார்

    தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், மாணவியின் மறு சேர்க்கை தொடர்பாக அண்ணா பல்கலைகழகம் தான் முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தார்

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாணவியின் மறு சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும், ஜனவரி 2022ல் நடைபெற உள்ள ஐந்தாவது செம்ஸ்டர் தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு
    வழக்கை முடித்து வைத்துள்ளார்
    [12/22, 17:55] Sekarreporter 1: ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க, யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் அதி நவீன தெர்மல் ஸ்கேனிங் கேமராக்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யலாம் என ரயில்வேவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

    இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், நவீன
    தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தியதன் மூலம் 69 சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    யானைகள் கடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள 19 கி.மீ. தூரத்திற்கு வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், யானைகள் கடந்து செல்ல தண்டவாளங்களுக்கு அடியில் பாதை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

    விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், யானைகள் மட்டுமல்லாமல் எந்த விலங்குகளும் ரயிலில் அடிபட்டு பலியாவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் எனவும், ரயில் தண்டவாளங்களை ஒட்டி சூரிய மின்சக்தி வேலிகளை அமைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

    அதேபோல, யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் முறையில் எச்சரிக்கும் அதி நவீன கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து வனத்துறையுடன் கலந்தாலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    [12/22, 20:47] Sekarreporter 1: பள்ளி வகுப்பறைகளையும், கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை, திருமங்கலத்தை அடுத்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவரின் மகன் சிவநிதி, திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம், வகுப்பறையை சுத்தம் செய்யும்படி, வகுப்பாசிரியர், சிவநிதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சுத்தம் செய்யும் போது, டெஸ்க் விழுந்து, சிவநிதியின் இடதுகால் விரலீல் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    வகுப்பறையை சுத்தம் செய்யக் கூறியதால் தான் தனது மகன் காயமடைந்துள்ளதால், இது மனித உரிமை மீறல் எனக் கூறி, ஆதிசிவன், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

    இந்த புகாரை விசாரித்த ஆணையம், சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரையோ, வகுப்பாசிரியரையோ குறை கூற முடியாது எனவும், பள்ளி நிர்வகம் தான் காரணம் எனவும் கூறி, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

    மேலும், பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பள்ளிகளை கண்காணிக்கும்படி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்த வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

You may also like...