Madras high court orders march 17 ஐகோர்ட் உத்தரவுகள்

[3/17, 10:42] Sekarreporter: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வேட்புமனுவில் சொத்து மற்றும் கடன் விவரங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறுவது தவறு எனவும், அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும் வாதிட்டார்.

ஏதேனும் விவரங்களை மறைத்திருந்தால் தான் வேட்புமனுவை நிராகரிக்க முடியும் எனத் தெரிவித்த அவர், வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்துக்களை வாங்கிய விலையையும், தற்போதைய சந்தை மதிப்பையும் குறிப்பிட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மிலானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தகவல்களை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால், அவரை போட்டியிடவே அனுமதித்திருக்க கூடாது எனவும், மனைவி பெயரில் உள்ள பங்களாவைப் பற்றிய தகவலை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

தமிழக முதல்வராக இருந்து பல சட்டங்களை கொண்டு வந்த பன்னீர்செல்வம், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இன்று இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, பன்னீர்செல்வத்தின் மனுவை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
[3/17, 16:14] Sekarreporter: நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அகமதுபுகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15 ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்து குற்றத்தில் ஈடுபட்டதாக வருவாய் புலனாய்வு இயக்ககம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் மூலம்
சட்ட விரோதமாக மோசடி செய்து கோடிக்கணக்கான பணத்தை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பரிமாற்றம் செய்துஅதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாக பணம்பரிமாற்றம் செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பண பரிமாற்றசட்டத்தின் கீழ் அகமது புகாரியின் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் அவர், ஜாமினில் விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் 21 ம்தேதி ஒத்திவைத்துள்ளார்.
[3/17, 17:21] Sekarreporter: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இட்ச் ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர் தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் பிந்தங்கியவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத்தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், நீட் தேர்வு தகுதி அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

மேலும் அவர், பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதாகவும், தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட்ச் ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது எனவும் அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறி விட்டது எனவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குவதாகக் கூறிய வழக்கறிஞர், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

விசாரணையின் போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது எனக் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[3/17, 17:59] Sekarreporter: அன்னிய மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மரங்களை வெட்டுவதற்கான விருப்பஙக்ளை கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் , யாரும் விருப்பம் தெரிவிக்காததால் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பிற மாநில அதிகாரிகளையும் அழைத்து அயல்நாட்டு மரங்களை அகற்ற ஆலோசனைகள் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அயல்நாட்டு மரங்களை அகற்றும் வழக்கில் நான்காண்டுகளாக முழுமையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்படுவதாக கூறி, அறிக்கையில் திருப்தி இல்லை என கேள்வி எழுப்பினர். 700 ஹெக்டேர்களில் அயல்நாட்டு மரங்கள் இருப்பதாக உயர் நீதிமன்ற குழு காண்டறிந்துள்ளதகவும், ஆனால் அந்த குழுவை விவரங்கள் கேட்டவில்லை என சுட்டிக்காட்டி, இதுபோன்ற அறிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றும், ஆக்கப்பூர்வமான பணியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். முன்னோடி திட்டத்தை தொடங்கவே 8 ஆண்டுகள் என்றால், அகற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் எனவும் வியப்பை வெளிப்படுத்தினர்.

தேவையற்ற மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை எனவும், அதனால் தான் இதுவரை ஒரு ஏக்கரில் கூட அகற்ற முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.

பின்னர் விரிவான தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது .

இதற்கிடையே தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் அதிகாரியை இடமாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அவரது சொந்த விருப்பத்திலேயே இடமாற்றத்தில் செல்வதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்த நீதிபதிகள், வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் தேவைப்படும்போது உதவ வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.
[3/17, 18:00] Sekarreporter: வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வன விலங்குகள் வேட்டை, வனக் குற்றங்கள் தடுப்பு ஆகியவை தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் பாரதிராசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை மற்றும் ரயில்வே தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த அறிக்கைகளில் தடுப்புச்சுவர் கட்டுமானம் அகற்றப்பட்டது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும், கண்காணிப்பு கோபுரம், சூரிய ஒளி வேலிகள், சுரங்கவழி பாதை ஆகியவை குறித்து முழுமையான தகவலும் இல்லை என சுட்டிக்காட்டினர்.

பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜை தலைவராகவும், காவல்துறை ஐ.ஜி. முருகன், வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், உதவி தலைமை முதன்மை வனப்பாதுகாவலரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க இருப்பதாகவும், அதை தெரிவிக்க அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில் கொடைக்கானல், ஆனைமலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நீரஜ் குமார் சேகர் ஆஜராகி காட்டுத்தீ 24 மணி நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், மனிதர்களோ, வனவிலங்குகளோ பலியாகவில்லை என விளக்கம் அளித்தார்.
[3/17, 21:21] Sekarreporter: தமிழ்நாட்டில் சிறப்பான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு

சென்னை, மார்ச்.18&
தமிழ்நாட்டில் சிறப்பான, அற்புதமான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை காட்டும் நூலாக சிலப்பதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரணியம் பேசினார்.
*சுழற்கோப்பை*
சென்னை ஐகோர்ட்டில் உள்ள தி மெட்ராஸ் பார் அசோசியேசன், சட்ட கல்லூரி மாணவர்களிடையே மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்தி, வெற்றி பெறும் கல்லூரிகளுக்கு சுழற்கோப்பை வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் அறிமுக விழா சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி, வி.பார்த்திபன், ஆர்.மகாதேவன், எஸ்.வைத்தியநாதன், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்ட நீதிபதிகள், அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*போராட்டக்கதை*
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரையும் தி மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன் வரவேற்று பேசினார். செயலாளர் சீனிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார். போட்டியில் வெற்றிப் பெறுவோருக்கு வழங்கப்பட உள்ள சுழற்கோப்பையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், Ôசிலப்பதிகாரத்தில் சட்டமும் நீதியும்Õ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:&
சிலப்பதிகாரம் என்பது அநீதியை எதிர்க்கும் ஒரு பெண்ணின் போராட்டக் கதையாகும். எல்லோரும் சிலப்பதிகாரம் என்பது ஒரே ஒரு வழக்கு சம்பந்தப்பட்டது என்று நினைக்கின்றனர். ஆனால், 3 வழக்குகள் சம்பந்தப்பட்டது.
*3 வழக்குகள்*
ஒன்று கோவலன் மீது சுமத்தப்படும் திருட்டு வழக்கு. மற்றொன்று பாண்டிய மன்னன் மீது கண்ணகி தொடரும் வழக்கு. மூன்றாவது வழக்கு, மதுரையை அழிக்க வேண்டாம். முற்பிறவியின் ஊழ்வினையின் காரணமாக இது நடந்துள்ளது என்று மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் முறையிடும் வழக்கு.
பண்டைய இலக்கியங்களில் சிலப்பதிகாரத்துக்கு என்று தனி சிறப்பு உள்ளது. 2&ம் நூற்றாண்டிலேயே ஒரு சட்ட நூலாக சிலப்பதிகாரம் இயற்றப்பட்டுள்ளது. சட்ட நூலில் ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் நோக்கங்களும், வரையறைகளும் இருக்கும். அதுபோல சிலப்பதிகாரத்தில் உள்ளது.
*நீதி பரிபாலனம்*
நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, தமிழ்நாட்டில் சிறப்பான, அற்புதமான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை காட்டும் நூலாக சிலப்பதிகாரம் உள்ளது. உரிமையியல் சட்டத்தை விட, குற்றவியல் சட்டங்களை தான் அதிகமாக பண்டைய இலக்கியங்களில் பேசப்படுகிறது.இன்றைக்கு நாம் பின்பற்றக்கூடிய சட்ட கூறுகளுக்கான அடிப்படை, நம் பண்டைய இலக்கியங்களில் இருந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
…….படம் உண்டு……….
[3/17, 21:55] Sekarreporter: சென்னை,
*
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே தமிழ்நாடு போலீசார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இதில், ஒரு வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து விட்டது. 2 வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிரான ஆதாரங்களை, அதாவது டிஜிட்டல் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை தங்களுக்கு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு உதவி செசன்சு கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்தார்.
*
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதுபோல உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், துணை இயக்குனர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னாவை, ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக (அமிக்கஸ்கூரியாக) நீதிபதிகள் நியமதித்தனர். கடந்த 3 நாட்களாக இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர்.
*
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படுகிறது. அதை போலீஸ் தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தும், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எதற்காக போலீசார் இவ்வாறு செயல்படுகின்றனர் என்று தெரியவில்லை?” என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா, “போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சென்னை போலீஸ் கமிஷனர் கொடுத்து விட்டார். மீதமுள்ள ஆவணங்கள் சிறப்பு கோர்ட்டில் உள்ளன. அந்த கோர்ட்டை அணுகி தான் மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று வாதிட்டார்.
*
மேலும், “போலீசாரிடம் ஆவணங்களை கேட்டோம், அதை தரவில்லை என்று கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் மனுதாரர் எதுவும் கூறவில்லை. ஐகோர்ட்டில் வந்து இப்படி ஒரு தகவலை தெரிவிப்பது நியாயமற்றது” என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
…………………
[3/18, 06:51] Sekarreporter: வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மதுரவாயல் ஏரிக்கரை தனலட்சுமிநகரைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும், வேளச்சேரியைச் சேர்ந்த செல்வியம்மாள் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்பு மதன்குமார் வேலைக்கு செல்லாமல் வரதட்சணை கேட்டு செல்வியம்மாளை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த செல்வியம்மாள், 2015ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக மதன்குமார், அவரது தந்தை சடகோபன், தாயார் செந்தாமரை ஆகியோர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், குற்றம் சாட்டப்பட்ட மதன்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி மதன்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சடகோபன், செந்தாமரை ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You may also like...