Madras high court orders december 2nd

[12/2, 11:04] Sekarreporter 1: நிலம் விற்பனை தொடர்பான பிரச்சினையில் ஒரு குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டியதாக காவல்துறை உதவிஆய்வாளர் மீதான புகாரை திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் தன் மகனுடன் சேர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்
திருவாரூர் மாவட்டம், பொதக்குடி கிராமத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசப் நாசியா ஆகியோர் நிலத்தை வாங்க முன் வந்தனர். இதற்காக முன்தொகை தந்தனர். இதன்பின்னர் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி பணத்தை திருப்பிக் கேட்டனர்.

பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க எங்களால் முடியவில்லை. இதையடுத்து எங்கள் மீது கூத்தாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரை பெற்ற உதவிஆய்வாளர் தங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்தார். 3 வாரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெற்றுக்காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இதுகுறித்து திருவாரூர் காவல்துறை துணை கண்கானிப்பாளரிடம் புகார் செய்ய முயற்சித்தோம்.
ஆனால், கடந்த நவம்பர் 18ம் தேதி, உதவிஆய்வாளர் மற்றும் நிலத்துக்கு முன்தொகை கொடுத்த 3 பேரும் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.

உதவிஆய்வாளர் என் கணவரையும், என்னையும் அடித்து எங்களது வீட்டை விட்டு விரட்டினார். தற்போது எங்கள் வீட்டை அவர்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும், எங்கள் வீட்டை எங்களிடம் ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கடந்த மாதம் 27ம் தேதி தபால் மூலம் புகார் அனுப்பியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.அவரது வீடும், வீட்டுக்குள் உள்ள விலை உயர்ந்த பொருட்களும் சட்டவிரோதமாக கையகப்படுத்தி விட்டனர் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக கூத்தாநல்லூர் உதவிஆய்வாளறுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதால், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த உத்தரவில், வீட்டுக்குள் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்கக்கூடாது என்பதை நினைவுப்படுத்துகிறேன். என்று தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்
[12/2, 12:27] Sekarreporter 1: சென்னை மாநகராட்சி வார்டுகளை மண்டலவாரியாக ஒதுக்காமல், ஒட்டுமொத்தமாக பிரித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து, கூடுதல் வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்குவதால் அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது .

இந்நிலையில் வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் தொடர்ந்துள்ள மனுவில் மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் கோரிக்கை வைத்திருந்தார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிப்பதற்கான அவசியம் இருப்பதாகவும், வழக்கு குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்ததுடன், சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவுறுத்தியுள்ளனர்.
[12/2, 13:28] Sekarreporter 1: கண்ணகி – முருகேசன் ஆணவ கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜகவை சேர்ந்த தடா பெரியசாமி, முருகேசன் தந்தை சாமிக்கண்ணு, வழக்கறிஞர் பி.ரத்தினம் உள்ளிட்டோருக்கு சென்னை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தொல். திருமாவளவன் தொடர்ந்துள்ள வழக்கில் கடந்த 2003ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோர் கொடுரமாக கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் நீதிமன்றம் 13 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், தன்னை பற்றியும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தடா டி. பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்கறிஞர் பி.ரத்தினம் ஆகியோர் அளித்த பேட்டிகள் மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற முகநூல், ஆதவன் தீட்சன்யாவின் தந்துகி என்ற ப்ளாக்ஸ்பாட், ஜூனியர் விகடன் இதழ் ஆகியவற்றில் வெளியாகி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தன்னை பற்றிய குற்றச்சாட்டுகளின் உணமைத்தன்மையை முழுமையாக விசாரிக்காமல், கடந்த காலங்களில் பதிவான அவதூறு தகவல்களை, மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் பிளாக்ஸ்பாட்டில் மறுபதிவு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டுமெனவும், தனக்கு எதிரான உண்மைக்குபுறம்பான கருத்துக்களை பதிவுசெய்ய 8 எதிர் மனுதாரர்களுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவற்றை வெளியிட பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் திருமாவளவன் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன் பற்றிய அவதூறு கருத்துக்களை எதிர்மனுதாரர்கள் வெளியிட தடை விதித்ததுடன், வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
[12/2, 15:32] Sekarreporter 1: விஜிபி பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துமாறு காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கழிபட்டூரை சேர்ந்த பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த 2016ம் ஆண்டு சென்னையை அடுத்த விஜிபி பொழுதுபோக்கு மையத்திற்கு சென்றபோது,அங்கிருந்த வேவ் ஸ்விங்கர் ராட்சத ராட்டினத்தில், மனைவி மற்றும் இளைய மகள் விளையாடியபோது ராட்டினம் சரியாக இயக்கப்படாததால் தூக்கி வீசபட்டு இருவரும் படுகாயம் அடைந்ததாகவும், இதில் இளைய மகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் இளைய மகள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த நீலாங்கரை போலீசார் ஆலந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் குற்றப்பத்திரிகையில் இளைய மகள் இறந்ததை மறைத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் அளித்த அறிக்கையின்படி படுகாயம் அடைந்ததாக மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக மனுவில் தெரிவித்தார். காவல்துறை மோசமான விசாரணை நடத்தி விஜிபி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் எனவே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை, நீதிபதி எம். தண்டபாணி முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, டிஎஸ்பி அந்தஸ்தில் அதிகாரி ஒருவரை நியமித்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.அந்த வழக்கை 12 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்.

மேலும், மாநில சட்ட பணிகள் ஆணையக் குழுவில் பாதிக்கபட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற மனு அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[12/2, 17:59] Sekarreporter 1: காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாமக்கல்லில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு தனது காரில் வந்த பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ((ராஜேஷ்தாசு))க்கு எதிராக சிபிசிஐடி, பிப்ரவரி 27ஆம் தேதி பதிவு செய்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜூலை 29ஆம் தேதி 1300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்து விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதை மனதை செலுத்தி படித்து முடிவெடுக்காமல், விசாரணை வரம்பை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கு என்ற அழுத்ததிலேயே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த டிஜிபி-யாக பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள தன்னை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன், தனக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன் நடந்தது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...