Madras high court order january 18

[1/18, 07:46] Sekarreporter 1: கால்நடை மருத்துவர்களையும், தேவையான வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்காவிட்டால் வன உயிரினங்களை வெகுவாக பாதித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி ஆனைமலை வனப்பகுதி 1976-ல் வனவிலங்கு சரணாலயமாகவும்,1987-ல் இந்திராகாந்தி வன உயிரின பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள அக்காமலை, புல்மலை, கரியன்சோலை, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் தேசிய பூங்கா பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இங்கு கடந்த 1991-92ல் ஆசிய யானைகள் பாதுகாப்பு திட்டமும், 2007 – 08 ல் ஆனைமலை புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. உலகில் உள்ள மிக அரிய உயிர்ச்சூழல் மண்டலங்களுள் இதுவும் ஒன்றாக விளங்கி வருகிறது. சுமார் 958 சதுர கிமீ பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் பல்வேறு வன உயிரினங்கள் வசிக்கவும், பல வகை தாவர இனக்காடுகள் வளருவதற்கான மாறுபட்ட தட்பவெப்பநிலை நிலவுகிறது. 350-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு, பாம்பு இனங்கள், குரங்குகள், வரையாடுகள் மற்றும் அரிய வகை விலங்குகளும் மிகுதியாக வசிக்கின்றன.

இந்நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக கால்நடை மருத்துவர்கள், வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்கவும், வன உயிரினங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், இதேபோல திருப்பூர் மாவட்டம் அமராவதியில் உள்ள முதலைப் பண்ணைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கோரி வனத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெ.கிருஷ்ணகுமார் எனவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி முதலைப் பண்ணையில் கால்நடை மருத்துவர்களை நியமிக்கவும், வன உயிரினங்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் ஏற்னெவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் அளித்த விளக்கத்தில் நிதித்துறை மற்றும் மேலும் 2 துறைகளி்ன் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்து பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், கால்நடை மருத்துவர்களையும், தேவையான வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்காவிட்டால் அது வன உயிரினங்களை வெகுவாக பாதித்து விடும் என கருத்து தெரிவித்து, இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[1/18, 07:47] Sekarreporter 1: தேசத்தின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதை அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கனிம வளத்துறை தொடர்பான நிலுவை வழக்குகளை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சிமெண்ட் தயாரிப்பதற்கு தேவையான கனிமங்களை பெரம்பலூர் மாவட்டம் தேரணி கிராமத்திலிருந்து வெட்டி எடுத்து கொண்டு செல்வதற்கான வாகன அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திருச்சி டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனம் 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அந்த பகுதியில் இருந்து கனிமங்களை எடுத்துசெல்வதற்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் டால்மியா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில், கனிம வளங்களை எடுத்துச்செல்வதற்கும் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், குத்தகையே வழங்கபடாத நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுவது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உரிய விதிகளை கடைபிடிக்காமல் கனிம வளங்கள் அனுமதி அளவைவிட கூடுதலாக எடுக்கப்படுவதாகவும், இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் இடைக்கால உத்தரவுடன் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார். கனிம வளங்களை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் அரசுக்கு வருவாய் வருவதால், நீதிமன்றங்களில் இடைக்கால உத்தரவு பெற்றுள்ள வழக்குகளில் தடை உத்தரவுகளை நீக்க கோரி மனுத்தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனுக்களை நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து முடித்துவைக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் வருவாய் மற்றும் தேச நலன் சார்ந்துள்ளதால் இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறுவுறுத்தி உள்ளார்.

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, கனிம வளத் துறை தொடர்பான பல்வேறு வழக்குகளில் இடைக்கால உத்தரவை பெற்று பல நிறுவனங்கள் நாட்டின் சொத்துக்களை அபகரித்து வருவது, சட்டவிரோதமாகும் என்றும் எச்சரித்துள்ளார். விதிகளுக்கு முரணாக தேசத்தின் சொத்துக்களை சுரண்டுவதற்கு ஒருவரும் அனுமதிக்க கூடாது என்றும், கனிம வளங்களைத் திருடும் சட்டவிரோத செயல்களை மிக கடுமையான முறையில் அணுக வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி சுப்ரமணியம் அறுவுறித்தி உள்ளார்.

இதுபோன்ற வழக்குகளில் பல மனுக்கள் காணாமல் போயுள்ளதாகவும், அதனால் பட்டியலிடப்படாமல் உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதுபோன்ற வழக்குகளை தேடி பட்டியலிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கு ஆவணங்கள் காணாமல் போதல், மனுக்களை வேறு இடங்களில் மாற்றிவைத்தல் போன்ற செயல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது உயர் நீதிமன்ற பதிவாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மத்திய மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் வருவாயை ஈட்டித்தரும் கனிம வளத்துறை தொடர்பான நிலுவை வழக்குகளை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு பதிவாளர் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவற்றை விரைந்து முடிக்க தேவைப்பட்டால் சிறப்பு அமர்வு அமைக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
[1/18, 10:17] Sekarreporter 1: இந்திய முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக்கழகங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி ஓபிசி மாணவர்கள் உரிய வாய்ப்பை பெற முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் அனைத்து மாநில சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன்,.மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர்,சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மேலும் அனைத்து மாநில தலைமைச்செயலளார்கள், சட்டப்பல்லைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த கடித த்தில் அனைத்து சட்ட கல்லூரிகளிலும்  பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றுவது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டாயமானது என்று ஏற்கனவே கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டியுள்ளார்.அந்த கடிதத்தின்படி,லக்னோ மற்றும் கொச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளிகளில் மாநில இடதுக்கீடு முறையை சரியாக பின்பற்றுவதாக தெரிவித்துள்ளதாகவும் ஆனால் மற்ற மாநிலங்களில் உள்ள சட்ட பல்லைக்கழகங்கள்,தேசிய சட்டப்பள்ளிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான அரசியலமப்பு சட்ட இட ஒதுக்கீடோ ,மாநில இட ஒதுக்கீடோ பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திமுக முன்னெடுத்துச்சென்ற சட்டப்போரட்டத்தின் விளைவாக, மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய வரலாற்று தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தேசிய சட்டப்பல்கலைக்கழங்களிலும் இட ஒதுக்கீடு தொடர்பாக யாரவது ஒருவர் வழக்கு தொடர்ந்து, இட ஒதுக்கீடு பெறும்வரை காத்திருக்காமல்,சட்டப்படிப்பில் எஸ் சி, எஸ் டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பளிக்க அகில இந்திய ஒதுக்கீடு,மாநில. அரசின் உரிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.உரிய இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்றால் சட்ட விளைவுகளை சந்திக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளார்
[1/18, 13:50] Sekarreporter 1: திரைப்பட படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களை எந்தவித இடையூறுமின்றி கொண்டு செல்ல ஏதுவாக உரிய நடைமுறைகளை வகுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடைபெற்ற போது, படப்பிடிப்புக்கு தேவையான டம்மி துப்பாக்கிகளை உதவி இயக்குனர் விக்டர் என்பவர் கொண்டு சென்றார். அவரிடம் இருந்து இந்த டம்மி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள கிடங்கிலிருந்து 150 டம்மி துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களை கொண்டு செல்வதற்குரிய நடைமுறைகளை வகுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்வவதற்குரிய நடைமுறைகளை வகுக்க கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மும்பை போலீசார், டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளதாகவும், அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...