Madras high court news updates

[8/18, 12:26] Sekarreporter: சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த டி.விஜயபாரதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பழைய மாமாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிலத்தில் தனிநபர்கள் கட்டுமானங்களை உருவாக்குவது சட்டவிரோதம் என்று, குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பாக கடந்த ஜூலை 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர், 15வது மண்டல அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார். தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கட்டடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில் தனது அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்ததாகவும், அதை பொதுப்பணித்துறை செய்து கொடுக்காததால், எம்.எல்.ஏ.-வே சொந்த செலவில் கூட்ட அரங்கை கட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதை மறுத்த நீதிபதிகள், தீவிரமான அராஜக செயலுக்கான முகாந்திரம் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். எவ்வளவு உன்னதமான நோக்கமாக இருந்தாலும், அரசு துறைகள் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதற்காக, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது எனவும் தெரிவித்தனர்.

அரசு நிலத்தில் தனிநபரால் கட்டப்பட்டுவரும் கட்டுமானத்தை இடிப்பதற்கு தேவையான தகுந்த உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வேறு காரணங்களுக்காக அந்த இடம் பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறித்திபுள்ளனர். சட்டவிரோத கட்டுமானத்தின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
[8/18, 15:16] Sekarreporter: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பெற உரிமை உள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய மத்திய – மாநில சுகாதார துறை செயலாளர்கள், மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது எனவும், 69 சதவீதவிட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், நீண்ட போராட்டங்களுக்கு பின் கிடைத்த இடஒதுக்கீட்டை பறிக்க கூடாது எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[8/18, 16:57] Sekarreporter: நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது  நண்பர் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நடிகை மீராமிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்
வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி  கைது செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஜாமீன் வழங்க கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீராமிதுன் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி பட்டியலின  சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக  புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டேன் எனவும் மனுவில் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
[8/18, 18:13] Sekarreporter: அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியது ஆகம விதிகளுக்கு முரணானது என கூறி, குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் எனவும், ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆகம விதிமுறைகளை மீறி அர்ச்சகரை நியமிக்கும் 38 கோவில்களின் அறிவிப்பாணைகளை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜி.ஜெயப்பிரியாவின் பதில்மனுவை தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், அந்தந்த கோவில் செயல் அலுவலர்களால் மட்டுமே அர்ச்சகர் நியமன நடைமுறைகள் நடைபெறுவதை புரிந்துகொள்ளாமல், தமிழ்நாடு அரசு நியமிப்பதாக அனுமானித்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றியே, கோவில் செயல் அலுவலர்கள் இந்த நியமன நடைமுறைகளை நடத்துவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகுதியின் அடிப்படையில் விளம்பரத்தின் மூலம் மனுதாரரை அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், அவர்களும் விண்ணப்பிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக அரசு பல்வேறு கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் பல்வேறு பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளதாகவும்,
மனுதாரர் குறிப்பிட்ட 37 கோயில்களில் 19 கோயில்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணபிக்காததால் ,யாரும் நியமிக்கப்படவில்லை என பதில்மனுவில் விண்ணப்பித்துள்ளார்.

இதுவரை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பணியாளர் விதிப்படி, பல்வேறு கோயில்களில் தகுதி வாய்ந்த 58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் சில கோயில்களில் அர்ச்சகர்கள் ஓய்வு பெற்ற நிலையிலும் நிரப்பப்படாமல் உள்ளதால், ஓய்வுபெற்றவர்களையே தொடர்ந்து பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள், நீதிமன்றத்தை நாடாமலேயே இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் அணுகி நியமனம் தொடர்பாக முறையிடலாம் என்ற விதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தை பின்பற்றியே அர்ச்சகர் நியமனங்கள் இருப்பதால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[8/18, 18:13] Sekarreporter: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

நடிகர் விஷால் 2016 ம் ஆண்டு மருது திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் பெற்று அதனை
திருப்பி செலுத்த முடியாததால் தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி தன் கடனை அன்பு செழியனுக்கு செட்டில் செய்யுமாறு கோரியுள்ளார், அதன்படி லைகா நிறுவனமும் விஷாலின் கடனை அடைந்துள்ளது

அதனை தொடர்ந்து,
2019 ம் செப்டம்பர் 21 ம் லைகா உடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.அதன்படி,
லைகா நிறுவனம் தன்னுடைய கடனை செலுத்தியதற்காக 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியான பின் 2020 மார்ச் சமயத்தில் 7 கோடியும், மீதத் தொகையை 2020 டிசம்பருக்குள்ளும் செலுத்தி விடுவதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்கவில்லை எனவும்,
மொத்தமாக 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாயை வழங்க விஷாலுக்கு உத்தரவிட கோரியும் லைகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்,
துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது என தெரிவித்து, லைகாவின் மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
[8/18, 18:16] Sekarreporter: திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவனங்கள் எத்தனை கம்பங்களை அமைத்துள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளின் எந்த வித அனுமதியும் பெறாமல் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஸ்பிரிங் ரெனிவெபில் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் 349 காற்றாலைகளை அமைத்து வருவதை எதிர்த்து சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தனியார் காற்றாலை நிறுவன தரப்பில், ஈரோடு பகுதியில் காற்றாலை மூலம் 300மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்பரேசன் நிறுவனம் காற்றாலைகளை அமைக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை நிறுவப்பட்ட 125 காற்றாலைகளுக்கான கம்பங்களில் 3 கம்பங்கள் மட்டுமே நீர்நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நீர்நிலைகள் மட்டுமல்ல அரசு புறம்போக்கு நிலம், சாலைகளையும் ஆக்கிரமித்து காற்றாலைக்கான கம்பங்கள் நிறுவப்பட்டிப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, காற்றாலைகளுக்கான கம்பங்களை நீர்நிலைகளில் இருந்து மாற்று வழிகளில் அமைப்பது குறித்தும், கன்னிவாடி பகுதியில் எத்தனை கம்பங்கள் நீர்நிலைகளில் நிறுவப்பட்டுள்ளன என்பது குறித்தும் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

You may also like...