Madras high court march 4 ஐகோர்ட் மார.ச் 4 . உத்தரவு

    [3/4, 10:45] Sekarreporter 1: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிகமாக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களின் பணியை வரன்முறைபடுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இ.எஸ்.வானுமாமலை, வி.ராஜலட்சுமி உள்ளிட்ட 45 பேர் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில், அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் தனியார் முகமைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆப்பரேட்டர்களாக தமிழக முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டு, கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக கணினி இயக்குதல், புகைப்படம் எடுத்தல், ஓட்டுநர் உரிமம் அட்டை தயாரிப்பது உள்ளிட்ட அலுவலக உதவிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    நீண்டகாலமாக பணியாற்றியவர்களின் பணியை வரன்முறைபடுத்தும்படி 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை தரப்பில் தமிழக அரசிடம் கருத்துருக்கள் அனுப்பப்பட்டதாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்காதததால் தங்களை போன்ற பணியார்களால் இரண்டு முறை தொடரப்பட்ட வழக்குகளில், பணி வரன்முறை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மனுதாரர்களை போல நியமிக்கப்பட்ட அனைவரும், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டதாகவும், அதனால் பணி நிரந்தரம் கோர உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டது.

    அதை ஏற்க மறுத்த நீதிபதி பார்த்திபன், கடந்த 2017 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றம் விரிவாக ஆராய்ந்து அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில், தற்போதைய மனுதாரர்கள் 45 பேரின் பணியையும் வரன்முறைபடுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுதொடர்பான நடவடிக்கைகளை 8 வாரங்களில் முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
    [3/4, 11:06] Sekarreporter 1: தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் தென்காசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடார் ஆகியோர் தாக்க்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ((பெருந்துறை))

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு ((14507 வாக்குகள் வித்தியாசம்)) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    மின்னணு வாக்குப்பதிவில் குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டியும், அவற்றை நிவர்த்தி செய்யாமல் தேர்தல் நடத்தப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடிகள் இருந்ததாகவும், 81 இயந்திரங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

    ((தென்காசி))

    இதேபோல தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். பழனி நாடார் வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், குறிப்பாக தபால் வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டுமென கோரியிருந்தார்.

    இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளன. தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை ரத்து செய்யக்கோரி பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமாரும், தென்காசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடாரும் தனித்தனியாக நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இருவருக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    [3/4, 11:23] Sekarreporter 1: சதுரங்க வேட்டை 2 கதையை திருடி, தெலுங்கில் கிலாடி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி, அதை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான விற்பனை நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கில் கிரண் ஸ்டூடியோ நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திரைப்பட தயாரிப்பாளர் கங்காதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை தமிழில் வெளியிட காப்புரிமை பெற்றுள்ளதாகவும், அதை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை ஹைதராபாத்தில் உள்ள கிரண் ஸ்டூடியோ நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் வர்மாவுடன் 40 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், ரவி தேஜா நடிப்பில் கிலாடி என்ற படத்தை, ஒப்பந்தத்துக்கு விரோதமாக சதுரங்க வேட்டை 2 கதையை மையமாக வைத்து தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதனால், கதை திடுட்டில் ஈடுபட்ட கிரண் ஸ்டூடியோ நிறுவனம் கிலாடி திரைப்படத்தை ஓடிடி மற்றும் பிற தளங்களில் வெளியிடுவதற்கான விற்பனை செய்வதற்கும், தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஒரு வாரத்தில் கிரண் ஸ்டுடியோ நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.
    [3/4, 14:21] Sekarreporter 1: கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்துக்கான வாடகை பாக்கியை செலுத்தவில்லை எனக் கூறி, தி மயிலாப்பூர் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் 24 கிரவுண்ட் நிலத்தை தி மயிலாப்பூர் கிளப் குத்தகைக்கு எடுத்துள்ளது.

    இந்த நிலத்துக்கு 3 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, அத்தொகையை செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி,
    மயிலாப்பூர் கிளப்புக்கு 2016ம் ஆண்டு ஜூலை 1 முதல் வாடகையை நிர்ணயித்து, அதன்படி வாடகை மற்றும் பாக்கியை வசூலிக்கும் வகையில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரியானது என்பதால், அந்த வாடகையை செலுத்த வேண்டுமென கூறி , மயிலாப்பூர் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கிளப் தரப்பில், 116 ஆண்டுகள் கோவில் சொத்தை குத்தகைக்கு எடுத்து கிளப் நடத்தி வருவதாகவும், வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

    அறநிலைய துறை தரப்பில், 4 கோடியே 77 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாகவும், அதை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதால், கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என கிளப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிலத்துக்கான வாடகையை மீண்டும் நிர்ணயிக்க கோரி விண்ணப்பிக்க கிளப்புக்கு உத்தரவிட்டனர்.

    அந்த விண்ணப்பத்தின் மீது 2 மாதங்களில் வாடகை மறு நிர்ணய நடைமுறையை முடிக்க அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வாடகை பாக்கியை செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டாம் எனவும், கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டு, விசாரணையை இரு மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.
    [3/4, 15:11] Sekarreporter 1: 18 வயது பூர்த்தியாகாத சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை தி. நகர் பகுதியில் சென்ற இருசக்கர வாகனத்தில் ஆட்டோ மோதியதில், அந்த வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு, கை கால் வாய் என உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு வழங்க நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் , மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக 18 வயது பூர்த்தியாகாத மைனர் சிறுவன் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்து என்பதால், இழப்பீடு வழங்க மறுத்து மனுவை நிராகரித்தது.

    இந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு ஏழு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சென்னை நீதிமன்றத்தில் சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி எஸ். கண்ணம்மாள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காப்பீட்டு நிறுவனம் தரப்பில், 18 வயது பூர்த்தி ஆகாதவர்கள் வாகனத்தை இயக்கக் கூடாது என விதிகள் உள்ள நிலையில், அதை மீறி சிறுவன் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தில் இழப்பீடு வழங்க முடியாது என்றும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    காப்பீட்டு நிறுவனம் தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கண்ணம்மாள், இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் இந்த வழக்கில் இழப்பீடு வழங்கி நீதிமன்ற உத்தரவிட்டால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு தொடர்பான வழக்குகள் குவிந்து விடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

    சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, அதை ஊக்குவிக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

    மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான சரியான தருணம் என்றும் ,
    இது போன்ற மேலும் ஒரு சம்பவம் நிகழாத வகையில் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
    [3/4, 15:11] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அத்ற்கு தடை விதிக்க வேண்டும் என, திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், வனப்பகுதிகளுக்குள் கால்நடைகள் கொண்டு செல்வதால், விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், மனித – விலங்கு மோதல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது எனத் தெரிவித்தது.

    அதனால், தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதற்கிடையில், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்த வழக்கும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது சிபிஐ தரப்பில், சிபிஐ – எஸ்.பி நிர்மலா தேவி, டி.எஸ்.பி சந்தோஷ்குமார் டி.எஸ்.பி ஆகாஷ்குமார் உள்பட நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே தமிழக அரசு, தமிழக வன பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் வைகை அணை நக்ஸல் தடுப்பு படை கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க பரிந்துரைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கேரள அரசு இன்னும் அதிகாரியை பரிந்துரைக்காததால், சிறப்பு புலனாய்வு குழு நியமனம் தொடர்பாக இறுதி முடிவெடுக்க ஏதுவாக வழக்கு விசாரணையை மார்ச் 17 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    [3/4, 15:49] Sekarreporter 1: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்துவந்தது.

    முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவரது மனுவில், தனது மருமகன் நவீன்குமாகும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்வித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுங்கட்சியை சேர்ந்த மகேஷின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை வழக்கில் தவறாக இணைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைதசெய்யப்பட்டு உள்ளாதால், ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

    ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ள இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
    [3/4, 16:25] Sekarreporter 1: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் காவல் புகார் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சுதந்திரமான நபரை நியமிக்கும் வகையில் இதுசம்பந்தமான திருத்தம் செய்வது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

    காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

    மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

    இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2013ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியதாகவும், மாநில அளவில் உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் அடங்கிய குழுவும்; மாவட்ட அளவில் ஆட்சியர், எஸ்.பி அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சுதந்திரமான நபரை ஏன் புகார் ஆணையத்தில் நியமிக்கவில்லை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக புகார் குழு அமைக்கப்பட்டது ஏன் எனவும் எனக் கேள்வி எழுப்பினர்.

    மேலும், அனைத்து மாநிலங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல் புகார் ஆணையங்களை அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காவல் துறையினருக்கு எதிரான புகார்களை, அவர்களே எப்படி விசாரிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

    இதுசம்பந்தமான விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து, அதுகுறித்து விளக்கமளிக்க அரசுத்தரப்பில் ஒரு வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், புகார் ஆணையம் அமைப்பது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்வது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்க அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளிவைத்தனர்.
    [3/4, 17:25] Sekarreporter 1: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கை, எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி குடும்பம் நடத்தியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மணிகண்டன், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் நடிகை சாந்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் அளித்த புகார் தொடர்பான வழக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால் அந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றத்திற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், இன்னும் எண்ணிடும் பணி முடியவில்லை என காவல்துறை தரப்பில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை நடைமுறை முடிந்தவுடன், வழக்கு தானாகவே சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என விளக்கம் அளித்து, சாந்தினி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
    [3/4, 17:35] Sekarreporter 1: தன் மீதான நில அபகரிப்பை வழக்கை ரத்து செய்யக்கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

    இந்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இதேபோல, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த இரண்டு மனுக்களும், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அப்பாவுக்கு எதிரான வழக்கை முழுமையாக விசாரித்ததாகவும், தவறான தகவல்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அப்பாவு மற்றும் தாமோதரன் தாக்கல் செய்த மனுக்களை முடித்து வைத்தார்.

You may also like...