Labour order நீதிபதி ஜி,கே. இளந்திரையன்

பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்களின் சம்பள பாக்கி மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர், குடிமைப் பொருள் வழங்கல் செயலாளர், குடிமைப் பொருள் வழங்கல் இயக்குநர், பாப்ஸ்கோ நிர்வாக இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் பாப்ஸ்கோ நிறுவனத்தில் 1991 ஆம் ஆண்டு உதவியாளர் பணிக்கு தற்காலிக தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டு, பின்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட நிலையில் நிதி நெருக்கடி காரணமாக, 2018ஆம் ஆண்டு முதல் சம்பளம் மற்றும் பிற ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படவில்லை என அந்த நிறுவானத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 142 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி,கே. இளந்திரையன் ஊழியர்களுக்கான பாக்கி சம்பளத்தையும், ஓய்வுகால பலன்களையும் பன்னிரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டுமென 2024 ஜூலை மாதம் புதுச்சேரி அரசுக்கும், பாப்ஸ்கோ-வுக்கும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி ஊழியர்கள் தரப்பிலும், இறந்த ஊழியர்களின் குடும்பத்தினர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விசாரணையின்போது, புதுச்சேரி அரசு தரப்பில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பலமுறை அவகாசம் கொடுத்தும் நீதிமன்ற உத்தரவை புதுச்சேரி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு நீதிபதி கவனத்திற்கு கொண்டுவந்தார் இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர், குடிமைப் பொருள் வழங்கல் செயலாளர், குடிமைப் பொருள் வழங்கல் இயக்குநர், பாப்ஸ்கோ நிர்வாக இயக்குநர் ஆகியோர் செப்டம்பர் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version