Judge Danapal allowed / manethaneya makkal.party
Manitha neya makkal party 
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சொந்தம் கொண்டாடி
தமிமுன் அன்சாரியை எதிர்த்து வழக்குத்தொடர
ஹாரூன் ரஷீத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவு
சென்னை
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சொந்தம் கொண்டாடி கட்சியின் தற்போதைய தலைவராக பதவி வகிக்கும் தமிமுன் அன்சாரியை எதிர்த்து கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஹாரூன் ரஷீத் கட்சி உறுப்பினர்கள் சார்பில் வழக்குத் தொடர அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயகக் கட்சி கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கியபோது கட்சியின் தலைவராக டி.கே.பஷீர் அகமது, பொதுச் செயலாளராக ஷேக் இப்ராஹிம், துணைத் தலைவராக செய்யது மகபு சுபஹனி, பொருளாளராக ஜெய்னுலாபுதீன் பதவி வகித்தனர்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மனிதநேய ஜனநாயக கட்சி இரட்டை இலை சின்னத்தி்ல் நாகப்பட்டினம் மற்றும் வேலூரில் போட்டியிட்டது. நாகப்பட்டினத்தில் தமிமுன் அன்சாரியும், வேலூரில் எஸ்.எஸ். ஹாரூன் ரசீதும் போட்டியிட்டனர். இதில் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்று எம்எல்ஏ-வானார். ஹாரூன் ரசீது தோல்வியடைந்தார்.
இந்நிலையில் கடந்த 2022 டிச.10 அன்று நடந்த கட்சியின் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக டி.கே.பஷீர்அகமது, பொதுச் செயலாளராக ஹாரூன் ரசீது, துணைத் தலைவராக செய்யது மகபு சுபஹனி, பொருளாளராக என்.ஏ.தைமியா மற்றும் 6 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டதாக ஹாரூன் ரசீது தரப்பு கடந்த 2023 பிப்.22 அன்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.
கட்சியின் செயற்குழுக்கூட்டம் 2022 அக்.8 அன்று இளையான்குடியிலும், பொதுக்குழுக்கூட்டம் 2022 டிச.24 அன்று எழும்பூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றதாகவும், அதில் தனது தலைமையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் தமிமுன் அன்சாரி தரப்பும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.
அதையடுத்து தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டங்கள் செல்லாது என்றும், அந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் தேர்வு சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும், கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தடை விதிக்கக்கோரியும், பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சி மற்றும் கட்சி உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடர அனுமதி கோரி ஹாரூன் ரசீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
. இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பாக நடந்தது. அப்போது ஹாரூன் ரசீது தரப்பி்ல் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.ஸ்ரீனிவாஸ், வழக்கறிஞர் குணசேகரன் ஆகியோர், ‘‘ கடந்த 2016 முதல் 2021 வரை எம்எல்ஏ-வாக பதவி வகித்த தமிமுன் அன்சாரி கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் நோக்கில் கட்சித் தலைவரான பஷீர் அகமது தனது பதவியை ராஜினாமா செய்தது போல அவரது கையெழுத்தை போலியாக போட்டும், அதன்பிறகு கட்சியின் செயற்குழு இளையான்குடியிலும், பொதுக்குழு எழும்பூரிலும் நடைபெற்றது போல தமிமுன் அன்சாரி தரப்பு மோசடியாக ஆவணங்களை தயாரித்து, அந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது. அதை சட்டவிரோதம் என அறிவிக்கும்படி வழக்குத்தொடர அனுமதி கோாி தான் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளோம், என வாதிட்டனர். பதிலுக்கு தமிமுன் அன்சாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.எஸ். அமோக் சிம்ஹா, தற்போதைய சூழலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கைத்தொடர மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை. ஏற்கெனவே எங்களது கட்சியின் பொருளாளராக பதவி வகித்த ஹாரூன் ரசீது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கடந்த 2023 பிப்.7 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டு, அன்றைய தினமே இடைநீக்கமும் செய்யப்பட்டார். அதன்பிறகு கடந்த 2024 பிப்.28 முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார். அதேபோல பஷீர் அகமதுவும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர்கள் நடத்தியதாக கூறப்படும் பொதுக்குழுக்கூட்டம் தான் செல்லாது. அவர்கள் இருவருக்கும், எங்களது கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே எங்கள் கட்சியை எதிர்த்து வழக்குதொடர அனுமதி கோரும் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும், என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘ வழக்கின் முக்கிய நிகழ்வுகள் சென்னை உயர் நீதிமன்ற வரம்புக்குள் நடைபெற்றுள்ளது என்பதால் இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு உரிமை உள்ளது. இருதரப்பும் கட்சிக்கு சொந்தம் கொண்டாடுவதால், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், எதிர்மனுதாரர்கள் தரப்பில் எழுப்பும் ஆட்சேபனைகள் குறித்தும் பிரதான வழக்கின் விசாரணைக்குப்பிறகுதான் முடிவு செய்ய முடியும். எனவே மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சார்பில் தமிமுன் அன்சாரியை எதி்ர்த்து வழக்குத் தொடர மனுதாரருக்கு அனுமதியளிக்கப்படுகிறது, என உத்தரவி்ட்டுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து மனித நேய ஜனநாயக கட்சி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதே ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நாகப்பட்டினத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானர். வேலூரில் போட்டியிட்ட ஹாரூன் ரசீது தோல்வியடைந்தார்.
இந்நிலையில் கடந்த 2022 தமிமுன் அன்சாரி தலைமையில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக நடத்தப்பட்ட செயற்குழு செல்லாது என வழக்கு தொடர அனுமதி கோரி ஹாரூன் ரசீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.தனபால் விசாரித்து, ஹாரூன் ரசீது ஐகோர்ட்டில் தமிமுன் அன்சாரி மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி இந்த விவகாரம் குறித்து பிரதான வழக்கின் விசாரணை நடத்தி தான் முடிவு செய்ய முடியும் என்று உத்தரவிட்டார்.