Judge ananth venkadesh

தமிழக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருப்பதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், முதல்வரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த தினத்தன்று, அடையாறு அருகே உள்ள அவரது மணிமண்டபத்திற்கு தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது பெசண்ட் நகரிலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீதிமன்றம் வர காலதாமதமானது.

இதையடுத்து அன்றைய தினம் உள்துறைச் செயலாளர் பிரபாகரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, அதிருப்தி தெரிவித்தார். இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காவல்துறைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உள்துறைச் செயலாளர் பிரபாகரை இன்று நேரில் வரவழைத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்தார் .

உள்துறை செயலாளர் பிரபாகர் ஆஜராகி முதல்வரின் கான்வாய் 12 வாகனங்களில் 6 ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், எதிரில் வரும் வாகனம் நிறுத்துவது இல்லை என்றும் தெரிவித்தார்.

நீதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்க வேண்டாம் என்றும், யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது என்றும், அடுத்தநாளே இதுதொடர்பாக போக்குவரத்தை சீரமைத்ததற்கு நன்றி என்றும் தெரிவித்தார். நீதிபதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதி, முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

You may also like...