Judge ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 12 பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 12 பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் பெண் நடத்துனர் பணிக்கு தகுதியானவர்களின் பட்டியலை வழங்கும்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, போக்குவரத்து கழகம் கோரிக்கை வைத்தது.

வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் நடத்துனர்களாக பணியாற்றி வரும் சரஸ்வதி, சாரதா உள்பட 12 பேர், பணி நிரந்தரம் செய்யக் கோரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து 12 பெண் நடத்துனர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு, முழு தேர்வு நடைமுறைகளை பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்டு, 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதால், இவர்களுக்கு மூன்று மாதங்களில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பணி நிரந்தரம் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர்களுக்கான பணிப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com