Jail case order தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன்
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கழிவறைகளை பராமரிக்கவும், அதற்கான பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க கோரியும் தொடரப்பட்ட பொது நல வழக்கில் இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இ.கிஷோர் குமார் தாக்கல் செய்ய மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு உரிய கழிவறைகள் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஓரிவு கழிவறைகளே உள்ளன. இந்த கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு கைதிகளே நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அதற்கான உபகரணங்களான முக கவசம், கையுறைகள், காலணிகள் போன்றவை வழங்கப்படுவதில்லை. தமிழ்நாடு சிறை விதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே, சிறைகளில் கழிவறைகளை பராமரித்து சுத்தப்படுத்துவது குறித்து அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன்
ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ஏற்கனவே, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சிறைகளை திடீர் ஆய்வு செய்துள்ளார். அதில் சிறைகளில் உள்ள கழிவறைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் டெல்லி உயர் நீதிமன்றமும் அந்த மாநிலத்தில் உள்ள சிறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள கழிவறைகளை பராமரிக்குமாறு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த விஷயத்தில் பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. தகுந்த ஆவணங்களை சமர்பித்தால் விசாரித்து உத்தவிட முடியும் என்று தெரிவித்து விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.